Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பூமி பற்றியெரியும் போது வீணை வாசிக்கும் ஜி8 நாடுகள்!

ரமேஷ் ஜோரா கடந்த புதன்கிழமை முடிவடைந்த உலகின் முக்கிய கைத்தொழில் நாடுகளின் 3 நாள் உச்சி மகாநாட்டுக் கூட்டங்கள் குறித்து அந்நாடுகள் திருப்தி தெரிவித்துள்ள அதேவேளையில், அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் உரிய காலத்திற்கு முன்னரே மட்டுப்படுத்தப்பட்ட அங்கீகாரத்தின் பின்னர் மகாநாட்டின் பொதுவான முடிவு குறித்து ஏமாற்றமடைந்துள்ளன.

ஜப்பானின் ரோக்யோவிலுள்ள வட பகுதித் தீவான ஹொக்காய்டோவில் நடைபெற்ற இந்த உச்சி மகாநாடு வறிய மக்களையும் ஜி8 நாடுகளின் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும் என்று வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பின் இணைத் தலைவர் குமிநைடோ ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

பல நாடுகளில் பட்டினியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் காரணிகளின் மூலாதாரத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதையே மகாநாட்டு முடிவுகள் காண்பிக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஜப்பான், கனடா, அமெரிக்கா ஆகிய இந்த 8 நாடுகளையும் சேர்ந்த மக்கள் அவர்களிலிருந்து ஒதுங்கிவாழும் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நைடோ கேட்டுக் கொண்டார்.

ஜி8 நாடுகள் புல்லாங்குழல் வாசிக்க பூமி பற்றி எரிகிறது என்று குமி நைடோ தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்கான பிரதான விடயங்களிலிருந்து ஜி8 நாடுகள் எவ்வளவு தூரம் ஒதுங்கி இருக்கின்றன என்பது குறித்து அந்நாடுகளை அவதானித்துவரும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் கவலை கொண்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்தார்.

100 இற்கும் அதிகமான நாடுகளில் செயற்படும் தொழிற் சங்கங்கள், சமூகக் குழுக்கள், சமயக் குழுக்கள், பெண்கள் இளைஞர் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர் அமைப்புக்கள் ஆகியன அங்கம் வகிக்கும் ஒரு வளர்ந்துவரும் கூட்டமைப்பே வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பாகும். வறுமையையும் பாரபட்சங்களையும் ஒழிப்பதென்ற வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பு உலகத் தலைவர்களிடம் கோரியுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் எரிபொருட்கள் தொடர்பாக யதார்த்தமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமை பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. சுகாதாரம், கல்வி, நீர் போன்றவை தொடர்பாக போதிய வளங்களை ஏற்படுத்தவில்லை என்றும் காலவரையறை குறித்து உறுதிமொழி எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் நைடோ கவலை தெரிவித்தார்.

ஜி9 நாடுகள் மிலேனியம் அபிவிருத்திக் குழுக்களுக்கு உதட்டளவில் மாத்திரம் சேவை செய்யும் அதேவேளை 2015 ஆம் ஆண்டளவில் இந்து அற்ப குறிக்கோள்கள் கூட தோல்வியடையும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக இந்நாடுகளின் செயற்பாடுகளிலிருந்து தெரியவருவதாக நைடோ மேலும் கூறினார்.

வறுமையை அரைவாசியாக குறைப்பதிலிருந்து எச்.ஐ.வி/எயிட்ஸ் தொற்று பரவுவதை 2015 ஆண்டளவில் நிறுத்துவதுடன் உலகளாவிய ரீதியில் ஆரம்பக் கல்வியை புகட்டுவது வரையிலான எட்டுக் குறிக்கோள்கள் மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களில் அடங்குகின்றன. 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் விசேட கூட்டத்தில் நாடுகளினதும் அரசாங்கங்களினதும் தலைவர்கள் இந்தக் குறிக்கோள்களை ஏற்றுக்கொண்டார்கள்.

முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னமும் இருந்துவருகின்றன என்று அபிவிருத்தியும் ஆபிரிக்காவும் என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றில் ஜி8 நாடுகள் தெரிவித்துள்ளன. எங்கள் முயற்சிகளை மீண்டும் தீவிரப்படுத்துவதுடன் வளர்முக நாடுகளுடனான எமது பரஸ்பர பங்களிப்பையும் பலப்படுத்தி இக்குறிக்கோள்களுக்கான எமது அர்ப்பணிப்பை புதுப்பிப்போம் என்று அவை தெரிவித்துள்ளன.

செப்டெம்பர் மாத மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள் தொடர்பான உயர்மட்ட மகாநாட்டில் இதற்கான அர்ப்பணிப்பு மீள்உறுதி செய்யப்படுவது ஒரு சாதகமான அறிகுறியே என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் மிலேனியம் இயக்கத்தின் ஆசிய பணிப்பாளர் மினார் பிம்பிள் இக்குறிக்கோள்களை 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்ற தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நிதி வளங்கள் போதியவையாக இல்லை என்றும் கூறினார்.

ஜி8 நாடுகளின் முன்னைய அர்ப்பணிப்புகளில் அநேகமானவற்றை அவற்றின் இந்த வருட அறிக்கை வலியுறுத்தியுள்ள போதிலும் 2005 ஆம் ஆண்டிலிருந்து உலகம் மிக மோசமாக மாறிவிட்டது என்று வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் 30 இலிருந்து 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளமை குறிப்பாக நாளுக்கு ஒரு டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டுவதற்கு கஷ்டப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பேரழிவைத் தருவதாக அமைந்துள்ளது என்று வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், இலட்சக் கணக்கானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உச்சி மகாநாட்டை நடத்தும் நாடு என்ற வகையில் தாம் அதனிடமிருந்து எதிர்பார்த்த தலைமைத்துவ பணியை ஜப்பானினால் மேற்கொள்ள முடியவில்லை என்று வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பின் ஜப்பான் பிரதிநிதி தட்சுவோ ஹயாஷி தெரிவித்தார். வறுமையை ஒழிக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜப்பானிய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் ஏமாற்றமே காத்திருக்கிறது.

தமது தலைமை, அர்ப்பணிப்பு, நோக்க உணர்வு ஆகியவற்றுக்காக உச்சி மகாநாட்டு பங்காளர்களிடமிருந்து கௌரவமும் புகழும் கொண்ட ஜப்பானிய பிரதம மந்திரி இவ்வாரம் பெற்றுக் கொண்டமைக்கு இந்த கருத்துக்கள் முரண்பட்டவையாக தெரிகின்றன என்று ஒரு பங்காளர் குறிப்பிட்டார்.

மகாநாட்டுப் பத்திரங்களை மற்றுமொரு கோணத்தில் ஆராய்ந்து வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பு உலகளாவிய உணவுப் பொருள் நெருக்கடியை சமாளிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஜி8 நாடுகள் 10 மில்லியன் டொலரை தருவதாக உறுதியளித்துள்ளதை வரவேற்றுள்ள போதிலும் நீண்டகால தேவைகளை சமாளிப்பதற்கு இந்தத் தொகை போதியதாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

பகிரங்கமானதும் திறனுள்ளதுமான விவசாய, உணவு சந்தைகளை விருத்தி செய்யும் ஜி8 நாடுகளின் ஊக்குவிப்புத் திட்டத்தினால் வறிய மக்கள் இன்று தாமாகவே உணவுப் பொருட்களை தேடிக்கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார்கள் என்றும் இது உணவுப் பொருட்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பின் அங்கத்துவ நிறுவனமான உகண்டா சங்கத்தைச் சேர்ந்த ஜோசேப் சூனா தெரிவித்துள்ளார்.

ஜி8 நாடுகள் வலியுறுத்திவரும் துரித நிர்ணய வர்த்தக பேச்சுவார்த்தைகளும் பேரழிவைத் தருமென தாம் நம்புவதாக வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பின் ஆபிரிக்க உறுப்பினர் சார்ள்ஸ் அபானி தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய உணவு நெருக்கடிக்கு முக்கிய காரணமான சந்தை அடிப்படையிலான அபிவிருத்தியை ஜி8 நாடுகளின் தற்போதைய தலைவர்கள் முன்வைத்துள்ள தீர்வு என்று தோன்றுகிறது. இது அபத்தமானது என்று வறுமைக்கு எதிரான சர்வதேச அமைப்பின் இந்தோனேசிய பிரதிநிதி டியான் கார்திகா தெரிவித்தார்.

விவசாய, உணவுச் சந்தைகளின் தாராளமயமே தற்போதைய நெருக்கடிக்கு நம்மை இட்டுச் செல்லும் காரணியாக இருக்கும்போது மேலும் தாராள வர்த்தகத்தைக் கொண்டு உணவு நெருக்கடிக்கு தீர்வு காண ஜி8 நாடுகள் ஏன் முயற்சி செய்கின்றன என்பது தமக்கு புரியவில்லை என்று விவசாயிகள் தலைவரான யோஷிதகா மஷிமா தெரிவித்தார்.

உலக சந்தையின் ஸ்திரமற்ற தன்மையிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக மக்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும். அதிக அளவிலான இறக்குமதி உணவுப் பொருட்கள் தேவையில்லை என்று மஷிமா ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ மகாநாட்டை குழப்பக்கூடும் என்பதற்காக 19 கொரிய விவசாயிகள் ஜூலை மாதம் 5 ஆம் திகதி 48 மணித்தியாலயம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஹெக்கய்டோ விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

பெருமளவிலான உலக உணவை விவசாயிகளும் சிறு உணவுச் செய்கையாளர்களுமே உற்பத்தி செய்கிறார்கள் என்று மஷிமா தெரிவித்தார். இவர்களது கருத்துக்களை அலட்சியம் செய்துவிட்டு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாதெனவும் அவர் கூறினார்.

ஐ.பி.எஸ்.

 

 

 

Exit mobile version