இதனிடையே பூகம்பத்தால் நொறுங்கிக்கிடக்கும் கட்டிட இடிபாடுகளிலிருந்து தோண்டத்தோண்ட பிணக்குவி யல்கள் வந்தவண்ணம் உள்ளன. பலியான வர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும் என்று புதிய தகவல்கள் தெரிவிக் கின்றன.
உலகின் மிக மிக ஏழை நாடுகளில் ஒன்றான ஹைட்டி தீவை தாக்கிய பயங் கர நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலை நகரான போர்ட் -ஆப் – பிரின்ஸ் முற்றி லும் நாசமடைந்தது. ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்துக்கட்டிடங்களும் நொறுங்கிக்கிடக்கின்றன. மருத்துவ மனைகளும் நொறுங்கிவிட்டன.
இதன் காரணமாக காயமடைந்தவர்களுக்கும், குற்றுயிரோடு மீட்கப்பட்டவர்க ளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் மக் கள் பெரும் துயரில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதுமிருந்து ஹைட்டி தீவுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான கியூபா, ஹைட்டி யில் பூகம்பம் ஏற்பட்டதை அறிந்தவுடனேயே உடனடியாக 400 தலைசிறந்த மருத்துவர்களை ஹைட்டிக்கு அனுப்பியது. அவர்கள், பூகம்பத்தில் நொறுங்கிப் போன போர்ட் – ஆப்- பிரின்ஸ் மருத்து வமனைக்கு அருகிலேயே உடனடி மருத்துவ முகாம்கள் அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர்.
அருகிலுள்ள மிகப்பெரிய நாடான அமெரிக்கா உடனடியாக இத்தகைய உதவி எதையும் ஹைட்டிக்கு அனுப்பவில்லை. எனினும், பூகம்பம் ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் வியாழனன்று அமெரிக்காவிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் விமானம் போர்ட்-ஆப்-பிரின்ஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. ஹைட்டிக்கு நிவாரண உதவிகளை அனுப்புவது தொடர்பான பணிகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஒருங்கிணைத்து வரும் உயரதிகாரியான ராஜீவ் ஷா, ஹைட்டிக்கு உடனடியாக பொருட்களை அனுப்புவதில் சிரமம் உள்ளது என்றும், அங்கு உள்ள ஒரே ஒரு துறைமுகமான போர்ட்-ஆப்-பிரின்ஸ் கடுமையாக சேதமடைந்திருப்பதால் உணவுக்கப்பல் செல்ல முடியாத நிலை உள்ளது என்றும் தெரிவித்தார். எனினும் சில நாட்களில் 48 மில்லியன் டாலர் மதிப் புள்ள உணவுப்பொருட்கள் ஹைட்டிக்கு சென்றடையும் என்றும், இது அடுத்த சில மாதங்களுக்கு சுமார் 20 லட்சம் ஹைட்டி மக்களுக்குபோதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, சனிக்கிழமையன்று ஹைட்டிக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஹைட் டிக்கு விமானம் மூலம் மட்டுமே பொருட்களை அனுப்ப முடியும் என்ற நிலையில், அமெரிக்காவிலிருந்து வரும் நிவாரண விமானங்களுக்காக தனது வான் எல் லையை கியூபா திறந்துவிட்டுள்ளது என தெரிவித்த ஹிலாரி, கியூப அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஹைட்டியில் முதலில் மேற் கொள்ளப்படவேண்டியது முழுவீச்சிலான மீட்புப்பணியே எனக்குறிப்பிட்ட ஹிலாரி, அமெரிக்காவிலிருந்து 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் திங்கட்கிழமை ஹைட்டியை வந் தடைவார்கள் என்றும் அவர்கள் புனர மைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என் றும் கூறினார்.
இதனிடையே, ஹைட்டியில் ஏற்பட் டுள்ள வரலாறு காணாத பூகம்ப பாதிப் பிலிருந்து அந்நாட்டு மக்களை மீட்க சுமார் 2 ஆயிரத்து 500 கோடி டாலர் நிதி தேவைப்படுகிறது என்றும், இந்த நிதியை உலக நாடுகள் அளித்து உதவ வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, மெக்சிகோ, வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களது உடனடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.
இதிலும் ‘அரசியல்’!
இதனிடையே, பூகம்பத்தால் பாதிக்கப் பட்டுள்ள ஹைட்டி மக்களுக்கு மிகப் பெரும் உதவிகளை செய்துகொண்டிருக்கும் கியூப மருத்துவர்களைப் பற்றியோ கியூப அரசைப்பற்றியோ மேற்கத்திய ஊடகங்கள் எதுவும் ஒரு வார்த்தைகூட செய்தி வெளியிடவில்லை. அனைத்து உதவிகளையும் அமெரிக்கா மட்டுமே செய்து வருவதாக திட்டமிட்ட பிரச்சாரத்தில் அவை ஈடுபட்டுள்ளன.
கியூபாவைப்பற்றி இரண்டு செய்தி நிறுவனங்கள் மட்டுமே எழுதியுள்ளன. அவற்றில் ஒன்று ‘ஃபாக்ஸ் நியூஸ்’ நிறுவனம் முற்றிலும் தவறாக, கியூபா எந்த உதவியும் செய்யவில்லை என்று எழுதியுள்ளது. மற்றொரு ஏடான ‘கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்’, கியூபா 30 டாக் டர்களை ஹைட்டிக்கு அனுப்பி யிருப்பதாக எழுதியுள்ளது.
ஆனால் உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் உதவிகளும் வந்து சேர்வதற்கு முன்பே, முதலில் உத விக்கரம் நீட்டியது சோசலிச கியூபா என்பதே உண்மையாகும். 400 டாக்டர்கள் மட் டுமின்றி இதரப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான ஊழியர் களையும் அனுப்பி வைத்துள்ளது.