Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புஷ்ஷை நிராகரித்த அமரிக்கப் பாராளுமன்றம்

அமெரிக்க நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி அளிக்கும் திட்டம் அமெரிக்க பார்லிமென்டில் தோல்வியடைந்தது. இதையடுத்து,வேறொரு திட்டத்தை கொண்டு வர அதிபர் புஷ் தீவிரமாக உள்ளார்.சர்வதேச நிதிச்சந்தைகளை ஆட்டம் காண செய்யும் அளவுக்கு அமெரிக்க பொருளாதார நிலைமை மோசமாகியுள்ளது.

திவாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சொத்துக்களை மீட்க, அமெரிக்க பெடரல் வங்கி 70 ஆயிரம் கோடி டாலர் உதவி வழங்க வேண்டும். இதற்கு அமெரிக்க பார்லிமென்டில் ஒப்புதல் பெற வேண்டும் என அதிபர் புஷ் கூறியிருந்தார்.

இதை, உடனடியாக செய்யாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் கடும் ஆபத்தை சந்திக்கும் என புஷ் குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்களுடனும், சபையில் அங்கம் வகிக்கும் இரு கட்சித் தலைவர்கள் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களிடம் புஷ் ஆலோசனை நடத்தினார். அமெரிக்க நிதியமைச்சர் தலைமையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.நேற்று முன்தினம் அமெரிக்க பார்லிமென்டில் விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் காரசாரமாக பேசினர்.

மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கிவிடக்கூடாது. மொத்தமாக வழங்கக் கூடாது. மூன்று பகுதிகளாக வழங்க வேண்டும் என்றெல்லாம் உறுப்பினர்கள் பேசினர்.நிதி உதவி வழங்குவதற்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்து மசோதா நிறைவேறும் நிலைக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தது. இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின் நடந்த ஓட்டெடுப்பில் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்று தான் இருந்தது.ஆனால், எதிர்பாரா விதமாக ஓட்டெடுப்பு முடிவு அதிபர் புஷ்ஷிற்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் இருந்தது.

நிதி உதவி அளிப்பதற்கு ஆதரவு தெரிவித்து 205 பேரும், எதிர்ப்பு 228 பேரும் ஓட்டு போட்டனர். இதனால், நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த ஓட்டெடுப்பு முடிவு, நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் முடிவதற்கு 20 நிமிடம் இருக்கும்போது வந்தது. இதையடுத்து அமெரிக்க பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.

இதன் பாதிப்பு, ஜப்பான் மற்றும் தென் கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மிகப்பெரிய பூகம்பத்தை நேற்று கிளப்பியது. தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகளிலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என மாலையில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் எல்லாம் ஆட்டம் கண்டன.இதற்கிடையில், தனது திட்டம் தோல்வியடைந்ததால், வருத்தமடைந்த அதிபர் புஷ், வேறொரு திட்டத்தை கொண்டு வந்து, வரும் வியாழக் கிழமைக்குள் நிலைமையை சரி செய்ய தீவிரம் காட்ட துவங்கிவிட்டார். இதற்காக, தனது சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, தனிப்பட்ட திட்டத்துடன் நேரடியாக களம் இறங்க உள்ளார்.உக்ரைன் அதிபர் விக்டர் யஷ்சென்கோ அதிபர் புஷ்ஷை நேற்று சந்தித்து பேசினார்.

அவரிடம் புஷ் பேசியதாவது: அமெரிக்க நிதிச்சந்தைக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் பார்லிமென்டில் தோல்வியடைந்தது குறித்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இதை சமாளிக்க மாற்று திட்டத்தை கொண்டு வரவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டிவரும். உடனடியாக எனது பொருளாதார ஆலோசகர்களுடன் ஆலோசிக்க இருக்கிறேன். பின்னர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறேன்.

Exit mobile version