அதன் விபரங்கள் வருமாறு:
மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008 மே 19 அன்று சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் (வயது-30) வவுனியா நகருக்கு வந்த போது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டார் என்று எனக்கு தகவல் கிடைத்தது.
கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியா நகர குறியீட்டுடன் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து உனது கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால், அவர் கொழும்புக்கு வேலைக்குப் போய் விட்டார் என்று கூறுமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கணவனை விடுவிப்பதற்கு 50 லட்சம் ரூபா பணம் தருமாறும் கோரினார்கள். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்த போது 10 லட்சம் கேட்டார்கள். அதுவும் இல்லை என்று கூறினேன்.
கடைசியாக 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் கேட்டார்கள். குறித்த பணத்தொகையை வவுனியா நகரில் வைத்து என்னிடம் ஒருவர் வாங்கி சென்றார். ஆனால் இன்று பணமும் இல்லை, கணவரும் இல்லை, இரு பிள்ளைகளுடன் கஸ்டத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.
என்னிடம் பணம் பறித்தவர்கள் தம்மை கருணா குழு என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் எனக்கு அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தை விசாரித்துப் பார்த்த போது அது புளொட் இயக்கத்தின் இறம்பைக்குளம் அலுவலக இலக்கங்கள் என அறிந்தேன்.
அதன் பின்னர் புளொட் இராணுவ பொறுப்பாளராக இருந்த சிவாவிடம் நான் சென்று கேட்ட போது, கணவர் தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் பெண் என்றும் பார்க்காமல் உன்னை கடத்துவேன் என அவர் மிரட்டினார்.
இதன் பின்னர் சிவா 28 லட்சம் பணம் தந்தால் உனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுகின்றேன் என தெரிவித்தார். ஆனால் கணவரை காட்டவில்லை.
சில காலம் கழித்து சிவாவை நேரில் கண்டு கேட்ட போது தான் சிறை சென்று வந்துள்ளார் என்றும், தனக்கு தற்போது எதுவும் தெரியாது எனவும் கூறினார். நானும் அவர்கள் மேல் உள்ள பயத்தால் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யவில்லை என்றார்.