Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக புளட் ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிக்கையில்இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல். அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் அதிகாரப் பகிர்வு என்பனவாகும்.கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.

நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்குத் தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அதைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது.

இப்போது யுத்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் நியாயமான தீர்வொன்றைத் நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சி நிரல் ஒன்று நடந்துகொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக்கூடாது. அதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version