Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலி வியாபாரத்தை வளர்க்க முயலும் மகிந்த பாசிசமும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒருங்கும் புள்ளி

புலிகளின் ஆயுதப் போராட்டம் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் சக்தி வாய்ந்தது என பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதர் கிறிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார். ஆக, புலிகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதே வேளை இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குச் சென்ற கே.பி இன் முகவர் ஒருவர் புலிகள் என்ற அடையாளம் புலம்பெயர் நாடுகளில் இருந்தால் மட்டுமே இலங்கையில் தாம் மகிந்த அரசால் மதிக்கப்படுவோம் என்று கூறியுள்ளார்.

ஆக, புலிகளின் அடையாளத்தை முன்வைத்து புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படும் வியாபாரம் இலங்கையில் கே.பி, டக்ளஸ், கருணா போன்ற அரச துணைக் குழுக்களுக்கும் தீனி போடுகிறது. ஜேர்மனிக்குச் சென்ற கே.பி இன் முகவர் மேலும் தெரிவிக்கையில் புலிகள் புலம்பெயர் நாடுகளில் பலவீனமடைந்ததுள்ளனர் என்றதும் டக்களஸ் கூடப் புறக்கணிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.

இதன் மறுபக்கத்தில் புலிகள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதைக் காரணம் காட்டியே மகிந்த அரசு உலக அபிப்பிராயத்தைத் தனக்குச் சார்பானதாக மாற்றிக்கொள்கிறது. ஒரு புறத்தில் புலம்பெயர் புலி வியாபார அமைப்புக்களுக்கும் மறுபுறத்தில் இலங்கை அரசிற்கும் பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் பின்புலத்தில் செயற்படுகின்றன. இதற்கான காரணம் இலங்கை அரச பாசிசத்தை உறுதிப்படுத்துவதே ஆகும்.

ஆக, தீவிர புலி ஆதரவாளர்கள் போன்று நாடகமாடும் வியாபாரிகள் இலங்கை அரசுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். ஆயிரமாயிரமாய் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தில் உயிர்நீர்த்த போராளிகளின் தியாகங்கள் வியாபாரமாக்கப்பட்டுள்ள அருவருக்கத்தக்க அபாயகரமான சூழல் காணப்படுகிறது.

கே.பி இன் முகவரின் செயற்பாட்டிற்கும் கிறிஸ் நோனிஸ் இன் அறிக்கைக்கும் நெருங்கிய தொடர்புகளைக் காணலாம். இரண்டுமே மகிந்த பாசிசத்தையும் அரச துணைக்குழுக்களையும் பலப்படுத்தும் தந்திரோபாயமே. இதற்குத் துணைசெல்வது புலம்பெயர் அமைப்புக்களே. இப் புலம்பெயர் அமைப்புக்களிடம் குறிப்பான வேலைத்திட்டங்கள் எதுவும் கிடையாது. மகிந்த ராஜபக்சவைத் தண்டிப்பது, தமிழரின் தாகம் தமிழீழம் போன்ற வெற்று முழக்கங்களை முன்வைப்பது மகிந்த அரசிற்கு எந்த வகையிலும் பாதிப்பாக அமையாது.

இன்று வரை பிரிந்து செல்லும் அடிப்படை ஜனநாயக உரிமையையே நாங்கள் கோருகிறோம் என உலக மக்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளத் தலைப்படாத இந்த அமைப்புக்களின் இருப்பிற்கு களியாட்ட நிகழ்வுகளும் அஞ்சலி நிகழ்வுகளுமே ஆதாரம்.

இலங்கையில் வடக்கும் கிழக்கும் சிங்கள மயமாக்கப்பட்டு தேசிய இனப் பரம்பல் அழிக்கப்படும் வரை புலிவியாபாரம் இலங்கை அரசிற்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் தேவைப்படும்.

அதன் பின்னர் இவ்வமைப்புக்கள் கோவில்கள் போன்ற சங்கங்களாக மாற்றப்பட இவற்றின் தலைவர்கள் கிடைக்கும் பணத்துடன் சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வார்கள். இந்த நிலையில் மாற்று அமைப்புக்கான வேலைத் திட்டம் ஒன்றை முன்வைக்காவிட்டால் அழிவுகள் நிரந்தரமாகும்.

Exit mobile version