இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து வருகிறது இந்தியா. மாநில அரசு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு இத்தடையை நீடிக்கக் கோருவதன் மூலம் இத்தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை 14.5.2010 முதல் மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது 17.5.2010 அன்று தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தடையை எதிர்த்து வாதாட தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் கோரிக்கையை தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாய நீதிபதி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார், ஆனால் வழக்கறிஞர் மூலம் கருத்துகளை எடுத்துக் கூற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் தடையை அங்கீகரித்து உறுதிப்படுத்துவதற்காக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பாயத்தில், செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதாடுவதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தீர்ப்பாயத்தில் ஆஜரானார். இதற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பில் அதன் பிரதிநிதிகள் மட்டுமே கருத்து கூற முடியும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சட்ட ரீதியாக அனுமதி கொடுக்க முடியாது என்ற நிலையில், ஒரு வழக்கறிஞர் மூலம் வைகோ தனது கருத்தைத் தெரிவிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இந்திய அரசு கூறி இருக்கிறது. எனவே, இந்தத் தடை நியாயமற்றது. இந்தத் தடைக்குச் சொல்லப்படும் காரணங்கள் எதிலும் உண்மை இல்லை என்று வைகோ தெரிவித்தார். வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதால் இனி ஆகப்போவது எதுவும் இல்லை என்றாலும் பேரினவாத இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி இந்தியாவில் தலைமறைவாக உயிர்வாழும் பல நூறு முன்னாள் போராளிகள் வாழ்வில் நிலவும் அச்சம் மறையும் என்பது குறிப்பிடத் தக்கது.