Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தங்கள்!? :பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் .

21.09.2008.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 வீத ஆட்பலத்தைத் தாம் குறைத்து விட்டதாகப் படைத்தரப்பு கூறுகின்றபோதும் அவர்கள் இன்னமும் பலமாகவே இருக்கின்றார்கள் என்பதைக் கடந்த இரண்டு வாரங்களாகப் படையினருக்கு எதிரான தாக்குதலின்போது கண்டுகொள்ள முடிந்துள்ளதாக சண்டே ரைம்ஸின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியை நோக்கி நகர்வுகளைப் படையினர் முன்னெடுக்கின்ற நிலையில்  அப்பகுதிகளை நோக்கிப் படையினர் தமது எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளும் புதிய பாதுகாப்பு நிலைகளை அமைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முறிகண்டிப் பகுதியில் இருந்து தற்போது சுமார் 60 வீதமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

கடந்த வாரத்தில் அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கொக்காவில், ஜெயபுரம், போன்ற இடங்களை நோக்கிப் படையினர் தமது நகர்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

நாச்சிக்குடா பகுதியில், கடந்த வாரம் படையினர் இரண்டு தடவைகளாக மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் படையினரின் நகர்வுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய எதிர்த் தாக்குதல்களை நடத்துவர் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கிளிநொச்சியை நோக்கி நகர்வு மிகவும் உக்கிர கட்டத்தை அடைந்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version