Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் பலமிழப்பதை இந்தியா விரும்பாது:ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா .

30.10.2008.

விடுதலைப் புலிகள் தனிநாடு கோருவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதபோதும், அவர்கள் பலமிழப்பதை இந்தியா விரும்பாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தனிநாடு கோரினால் அது தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை இந்தியா ஒருபோதும் விரும்பாது என அவர் குறிப்பிட்டார். 
ஆயினும், விடுதலைப் புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டு தோற்கடிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது எனவும் ரில்வின் சில்வா கூறினார்.
இலங்கை விடயத்தில் இந்தியா தலையிட்டிருப்பதால் வன்னியில் இலங்கை விமானப் படையினர் நடத்திவந்த வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு அல்லது குறைக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்திருந்தமையைச் சுட்டிக்காட்டிய அமரசிங், இந்த விஜயத்தின் இறுதியில் வெளியிட்ட கூட்டறிக்கையின் பின்னணியில் முக்கிய விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கூறினார்.
“அந்த அறிக்கையைப் வைத்துப் பார்க்கும்போது இலங்கை, இந்தியாவிடம் முழுமையாகச் சரணடைந்துள்ளமை தெளிவாகிறது. இரு நாட்டக்குமிடையிலான ஒப்பந்தத்திற்கு அமையவே வன்னியில் விமானப் படையினரின் தாக்குதல்கள் குறைக்கப்பட்டு அல்லது நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன” என்று இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டார்.
இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அதிகரித்திருப்பதுடன், கடந்த காலங்களைப் பார்த்தால் அனைத்து விடயத்திலும் இலங்கை இந்தியாவுக்கு அடங்கிச் செல்வது தெளிவாகப் புலனாகிறது எனவும், இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியா சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா கூறியிருப்பதாகவும் அவர் கூறினார்.
“இலங்கை விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலையிட்டுள்ளன. இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார். இவற்றை நிறுத்தாவிட்டால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்” என்றார் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
Exit mobile version