தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் டாக்டர் பாலித கொஹன்னா குற்றம் சாட்டினார்.
போர் நிறுத்ததை நீடிப்பது பற்றி பேசுவதை விட, மோதல் நிறுத்த காலத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி முதலில் எழுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில் அரசின் இந்த மோதல் நிறுத்த அறிவிப்பை, கண்துடைப்பு என்றும் ஒரு அரசியல் நாடகம் என்றும் விடுதலைப் புலிகள் விமர்சித்துள்ளனர்.
இலங்கை அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ள இரண்டுநாள் போர்நிறுத்தமானது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஓர் அரசியல் நாடகம் என வர்ணித்துள்ள விடுதலைப்புலிகள், அனைத்துலகத்தின் அனுசரணையுடன் கூடிய, மனிதாபிமான நோக்கமுடைய, அரசியல் தீர்வுக்கான அடித்தளத்தைக் கொண்ட நிரந்தரமான ஒரு போர்நிறுத்தமே தேவை என அறிக்கையொன்றில் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
தமது நீண்ட கால நிலைப்பாடான இதனை மீண்டும் தாம் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
புலிகளின் கருத்து குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் பாலித கோஹன்னாவிடம் கேட்டபோது, அவர் விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கக்கூடிய நிலையில் இப்போது இல்லை என்றார்.
“புலிகள் இப்போது தோற்றுவிட்டார்கள். ஈழம் என்ற மாயையும் கலைந்துவிட்டது. புலிகள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது மக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தமது ஆயுதங்களை அவர்கள் கீழே போட வேண்டும் அவ்வளவுதான். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை பலவந்தமாக பிடித்து வைத்திருக்கிறார்கள் அவர்களை புலிகள் விடுவிக்க வேண்டும். எவரையும் பலவந்தமாக தடுத்து வைப்பது ஒரு குற்றச் செயல்”, என்று பி பிசி தமிழோசையிடம் பாலித கொஹன்னா அவர்கள் தெரிவித்தார்.
BBC