Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் தம்மை மீளப்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் மோதல்களை நிறுத்தப்போவதில்லை:கோதபாய

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு மோதல் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரைச் சந்தித்தபோது, பாதுகாப்புச் செயலாளர் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தைத் தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பினால் எந்தப் பயனும் ஏற்படவில்லையென்பதால், எமது இராணுவ நடவடிக்கைளை இடைநிறுத்தி மோதல் தவிர்ப்பை நீடிக்கமுடியாது என நான் அவரிடம் கூறினேன்” என கோதபாய ராஜபக்ஷ பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார்.

சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் அறிவித்த இரண்டு நாள் மோதல் நிறுத்த காலப்பகுதியிலும் பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

1976ஆம் ஆண்டு உகண்டாவின் என்டேப் விமானநிலையத்தில் 100ற்கும் அதிகமான பணயக் கைதிகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையைப் போலவே இங்கும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக்காட்டிய கோதபாய ராஜபக்ஷ, இந்த நடவடிக்கை மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று எனவும் கூறினார்.

“களநிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். சரியான தருணம் வந்ததும் நாம் உட்சென்று மக்களை மீட்போம். அதனை களமுனைத் தளபதிகளே தீர்மானிப்பார்கள்” என்றார் அவர்.

அதேநேரம், விடுதலைப் புலிகள் தம்மை மீளப்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் நீண்ட நாட்களுக்கு மோதல்களை அரசாங்கம் நிறுத்தப்போவதில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களை நோக்கி அரசாங்கம் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் ராஜபக்ஷ மறுத்தார்.

“ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கிருந்தாலும், பாதுகாப்பு வலயத்தில் இருந்தாலும் அவரை வெளியே எடுப்போம். பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்” என்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ.

Exit mobile version