Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் தடியைக் கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.: ரவூப் ஹக்கீம்

21.01.2009.

நாம் இப்போது மிகவும் ஆபத்தான காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். வித்தியாசமானதொரு காலத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு தரப்பினரும் வகுத்துக் கொண்ட வியூகங்கள் எல்லாம் பிழைத்துள்ளன. விடுதலைப்புலிகள் தான் இன்றைய ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவரக் காரணமாக இருந்தார்கள். புலிகள் தடியைக் கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா எழுதிய ‘சறந்தீபில் பா×தி’ எனும் நூல் வெளியீட்டு விழா சாய்ந்த மருதில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,  விடுதலைப் புலிகளின் கீழ் முழுமையான விமோசனம் பெறமுடியுமாவென்பது பற்றி தமிழர்களிடையே சந்தேகங்கள் உள்ளன.

ஆனால், தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக தமிழர்களின் விடுதலைப் போராட்டம் விரிவுபட்டுக் கொண்டே போனது. பின்னர் அது பயங்கரவாதமாக உருவெடுத்த போதும் அதனை அங்கீகரிக்க வேண்டிய நிலை இதனால் பெரும்பாலான தமிழர்களுக்கு ஏற்பட்டது. புலிகளின் வெற்றி தமிழர்களின் வெற்றியல்ல என்ற நிலைப்பாட்டினையுடைய தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால், புலிகளின் தோல்வி, முழுத் தமிழர்களின் தோல்வியாகப் பார்க்கப்படுகின்றது.

இப்போது சிலர் தேசப்பற்று பற்றி பேசுகின்றார்கள் ஆனால் உண்மையான தேசப்பற்றைக் காணமுடிவதில்லை. தேசப்பற்று என்பதில் இனம், மதம் போன்றன கலந்து காணப்படுகின்றன.  தேசப்பற்று என்பது அயோக்கியர்களின் அடைக்கலமாகும் என்று கூறப்படுவது சரியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜே.வி.பி.யும் ஜனாதிபதியின் வெற்றிக்கு உழைத்தவர்கள். இவர்களின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியது. ஜே.வி.பி.யின் இனவாத அரசியல், நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
 

 

Exit mobile version