Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் சிறார்களை தமது படையில் கட்டாயமாகச் சேர்க்கும் முயற்சியில் தீவிரம்: யுனிசெவ்

`17.02.2009.

இலங்கையில் வடக்கே வன்னிப் பகுதியில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்றுவரும் பகுதிகளிலுள்ள பெருமளவிலான சிறுவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தனது கடுமையான விசனத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கான சிறுவர் அமைப்பான, யுனிசெவ், இதற்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் சிறார்களை தமது படையில் கட்டாயமாகச் சேர்க்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக இலங்கைக்கான யுனிசெவ்வின் வதிவிடப்பிரதிநிதி பிலிபே டுவாமல்லெ இன்று கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், புலிகள் அமைப்பினர் கடந்த 2003 ஆம் ஆண்டிற்கும் 2008 ஆம் ஆண்டு இறுதிக்குமிடைபட்ட காலப்பகுதியில் சுமார் 6000 சிறார்களை தமது படையில் சேர்த்திருப்பதாக தமக்குத் தெளிவாகத் தெரியவந்திருப்பதாகவும், வலுக்கட்டாயமாகச் சிறுவர்களைச் சேர்க்கும் இந்த நடவடிக்கையில் 14 வயதையுடைய சிறுவர் தொகுதியினர் கூட இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

“இந்தச் சிறுவர்கள் உடனடியான ஆபத்துகளைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாரிய உயிர் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் புலிகளால் ஆட்சேர்க்கப்பட்டிருப்பது பொறுக்க முடியாதது,” என்று தெரிவித்திருக்கும் இலங்கைக்கான யுனிசெவ்வின் வதிவிடப்பிரதிநிதி பிலிபே டுவாமல்லெ, வன்னிப்பகுதியில் தற்போதைய மோதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் காயமடைந்து வருவது மிகவும் அபாயகரமானது என்றும் அச்சம் வெளியிட்டிருக்கிறார்.

“இந்த மோதல்கள் காரணமாக இங்குள்ள சிறுவர்கள் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள், படுகாயமடைகிறார்கள், வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகிறார்கள், இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுக்கிறார்கள், குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தேவைகளையும் இழந்துவருகிறார்கள். மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பெரும்பாலனவர்களிற்கு எரிகாயங்கள், முறிவுகள், வெடிச்சிதறல்களினாலும், துப்பாக்கிச் சன்னங்களினாலும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன,” என்று தனது அறிக்கையில் இலங்கைக்கான யுனிசெவ்வின் வதிவிடப்பிரதிநிதி பிலிபே டுவாமல்லெ தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒரு தொகுதியினர் கடந்தவாரம் அங்கிருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் மோதல்களின் போது, சிவிலியன்களினதும், குறிப்பாக சிறுவர்களினது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்படி அரசிற்கும் புலிகளுக்கும் மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

Exit mobile version