இலங்கையில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
நாச்சிக்குடா பகுதியில் நேற்று நண்பகல் 2.00 மணி முதல் இன்று அதிகாலை 2.00 மணி வரை சிறிலங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 34 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 7 சடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் புலிசார்பு இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளின் தீவிர முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படையினர் பின்வாங்கியதாவும், கொல்லப்பட்ட படையினரின் சடலங்களும், விட்டுச்சென்ற படைப் பொருட்கள் களத்தில் சிதறிக் கிடப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இந்தத் தாக்குதலில் 44 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாச்சிக்குடா, டெரான்கண்டல், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.