15.12.2008.
இலங்கையில் நடக்கும் போரில், தங்கள் படையணிகளில் விடுதலைப்புலிகள் கட்டாய ஆள்சேர்ப்புகளில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று பிரபல மனித உரிமை அமைப்பான, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இலங்கை படையினர் தமது தாக்குதல் அழுத்தங்களை அதிகரித்துவரும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து வெளியான அறிக்கை ஒன்றிலேயே இந்த குற்றச்சாட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவம் முன்னேறி செல்லச் செல்ல பொதுமக்கள் மேலதிகமான ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்; துப்பாக்கி சண்டைகள், ஷெல்களின் சத்தங்களை கேட்டபடி பலரும் தங்களின் நாட்களை கடத்துகிறார்கள்; அங்கு வாழும் பொதுமக்கள், தங்களை சுற்றியிருக்கும் விடுதலைப் புலிகளிடமிருந்து அதிகரித்த அழுத்தங்களை சந்திக்கத்துவகியிருக்கிறார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மனித உரிமைகள் தொடர்பில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மிக மோசமாக இருந்து வருவதாக கூறும் இந்த அறிக்கை, தற்போது நிலைமை இன்னமும் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கிறது.
வயது குறைந்த ஆண் மற்றும் பெண் சிறார்களை விடுதலைப்புலிகள் கட்டாயமாக தமது படையணியில் சேர்க்கும் போக்கு பலமடங்கு அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் பொதுமக்களும் கூட ஆபத்து நிறைந்த வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக கூறும் இந்த அறிக்கை, அவர்கள் போர்முனைகளில் பதுங்கு குழிகளை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
அதேசமயம், தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து வெளியேறி பயணிப்பதற்காக பொது மக்களுக்கு அளித்து வந்த அனுமதி சீட்டு முறையை, விடுதலைப்புலிகள் ஏறக்குறைய நிறுத்திவிட்டதாகவும், இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.