Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் இயக்கத்தின் நெடியவன் குழு உதவித் தலைவர் இலங்கைச் சிறையில்:போலிஸ் அதிகாரி

nediyavan
நெடியவன்

புலிகள் இயக்கத்தின் நெடியவன் குழுவின் இரண்டாவது தலைவர் எனக் கருதப்படும் சுப்பிரமணியம் கபிலன் என்பவர் இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ளார் என உதவிப் போலிஸ் அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் நந்த கோபன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஏழாலையைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்தார். யுத்த காலத்தில் புலிகளின் ஊடகப் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த இவர் 1990 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்ததாகவும் பின்னர் புலிகளின் சர்வதேசப் வலையமைப்பின் இலங்கைப் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார் எனவும் இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்தது.

யுத்தம் முடிந்தபின்னர் 2009 ஆண்டில் போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியா சென்றதாகவும், அங்கிருந்து 2013 ஆம் ஆண்டு லண்டன் செல்ல முற்பட்ட வேளையில் மலேசியப் போலிசாரினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் போலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
அங்கு சில காலம் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் 2014 மார்ச் மாதம் 6ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும், கட்டுனாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பதாக ஈரானிலிருந்து மலேசியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்தியைத் தமது கற்பனைகளோடு இணைத்து வியாபார ஊடகங்கள் தமது மூலதனமாக்கியுள்ளன.

அதே வேளை புலிகள் மீள ஒருங்கிணைகிறார்கள் என்று மக்களை ஏமாற்றும் இலங்கை அரசின் நாடகங்களில் ஒன்றா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. தவிர, நிழல் உலக வியாபாரமாகவும் நிழல் உலக தாதாக்களதும் அவர்களது ஊதுகுழல்களதும் யுத்தமாகவும் மாறிவிட்ட புலம்பெயர் ‘தேசிய’ அரசியலில் உள்முரண்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அமைப்புக்கள் இடையேயும் அவற்றின் உள்ளேயும் ஏற்பட்டுள்ள மோதல்களின் விளைவாக இக்கைது அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

இவ்வாறான பரபரப்புக்கள் இலங்கை அரசிற்கு மட்டுமல்ல புலம்பெயர் நிழல் உலக உளவாளிகளுக்கும் மூலதனமாக அமைத்துவிடுகின்றன. மக்களது விடுதலைக்கான புரட்சிகரப் போராட்டம் பிழைப்புவாதிகளதும், சர்வதேச பயங்கரவாத உளவு நிறுவனங்களதும் கைகளில் சிக்கியுள்ளதன் வெளிப்பாடே இவை.

Exit mobile version