தான் நடத்திய மனிதப் படுகொலைகளை வெற்றியென இலங்கை அரசு கொண்டாடிக்கொண்டிருந்த 18 ஆம் திகதி மே மாதம் இச் செய்தி வெளியிடப்பட்டது.
இலங்கையில். பெற்றோலிய மூலவள அபிவிருத்தி ஆணையகம் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இயங்கி வருகிறது. இவ் ஆணையகத்துடன் இணைந்தே டோட்டல் நிறுவனம் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிடுகையில் ஆராய்ச்சிக்கான முழுச் செலவையும் டோட்டல் நிறுவமே பொறுப்பெடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளது.
மகிந்த ராஜபக்ச இது தொடர்பாகக் கூறுகையில் இது வெறும் ஆராய்ச்சிக்கான நடவடிக்கையே என்றும் பெற்றோலிய விற்பனைக்கு நிறுவனங்கள் தனியான உடன்படிக்கைகளை எழுதிக்கொள்ளும் எனத் தெரிவித்தார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டிலிருந்தே பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் இந்தியக் கிளையான ‘கரின் இந்தியா’ மேற்குறித்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டது. 2011 ஆம் ஆண்டு எண்ணை கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த நிறுவனம் அறிவித்திருந்த போதிலும் அது குறித்த மேலதிக தகவல்களை இலங்கை அரசும் வேதாந்தாவும் இரகசியமாகவே வைத்துள்ளன.
ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றோலியத்தை விற்பனை செய்வதற்காகவே டோட்டல் ஒப்பந்தம் போடப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
2008 ஆம் ஆண்டு பெற்றோலி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் கடற்பிரதேசங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற தன்னார்வ நிறுவனத்தின் இயக்குனர் சபையில் அபிவிருத்தி உதவிக் குழுவின் தலைவராக இலங்கையின் முன்னை நாள் சமாதானத் தூதர் எரிக் சொல்கையின் பதவி வகிக்கிறார். இதற்காக பாரிசில் தங்கியிருக்கும் எரிக் சொல்கையிம் இலங்கைப் பிரச்சனையில் இன்னும் அக்கறை உள்ளவராகக் காணப்படுகின்றார். OECD தன்னார்வ நிறுவனம் வறிய நாடுகளை அபிவிருத்தி செய்வதற்காக எண்ணை ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத் தக்கது. ஆக, டோட்டல், ராஜபக்ச, சொல்கையிம், வேதாந்தா என்ற தொடர்பிற்கும் இனப்படுகொலைக்கும் நெருங்கிய உறவுகளைக் காணலாம்.