Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளை மீட்க ராஜபக்ச அரசு, ஐரோப்பிய நாடுகள், புலம்பெயர் பிழைப்புவாதிகள் முயற்சி

ltteபுலிகள், புலிகளின் சின்னம்,பிரபாகரன் போன்ற அனைத்து அடையாளங்களும் புலம் பெயர் நாடுகளில் மில்லியன்களுக்கான வர்த்தக அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய அரசும் புலிகளின் தடை நீடிப்பை மீள் பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை முன்வைக்காது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்றும் இது நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை ஆராயாமல் ஏனைய நாடுகளின் முடிவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த முடிவில் சட்டச்சிக்கல்கள் உள்ளதால் மட்டுமே இத்தடை நீக்கத்தை ஐரோப்பிய நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வெறுமனே சட்டம் சார்ந்த பிரச்சனையாகவே இம் முடிவை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புலிகள் மீதான் இத் தடை ஊடக மற்றும் இன்டர்நெட் தகவல்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐரோப்பிய நீதி மன்றம் மேலும் தெரிவித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தடைவிதிக்கப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை முன்வைக்கும் பணி நீதிமன்றத்தைச் சார்ந்ததல்ல.

ஆக, மூன்று மாத அவகாசத்தினுள் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைவிதிப்பதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அதுவரை தடை செல்லுபடியற்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மூன்று மாத காலம் வரை தடை செல்லுபடியற்றதாகும். அதன் பின்னர் தடை செய்வதற்குரிய புதிய காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்தால் தடை நீடிக்கும்.

புலிகள் அமைப்பு மட்டுமல்ல ஒரு அரசியல் இயக்கத்தைத் தடைசெய்வதென்பது, அவ்வியக்கத்தின் போராட்டத்திற்கான அரசியல் காரணங்களையும் தடைசெய்வதாகும். இந்த வகையில் புலிகளின் மீதான தடை அரசியல் உள் நோக்கங்களை கொண்டதும் நியாயமற்றதுமாகும். ஆயினும் புலிகளின் இன்றைய அடையாளம் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கேள்விக்குள்ளாக்க்கும் நிலையிலுள்ளது என்ற அடிப்படையிலிருந்தே இதன் தீர்ப்பின் அரசியல் ஆராயப்பட வேண்டும்.

புலிகள் என்ற அடையாளம் இன்று அடிடாஸ், நைக், ப்ராடா போன்ற பல்தேசிய வர்த்த நிறுவனங்களுக்கு உரித்தான வியாபார அடையாளங்களைப் போல புலம் பெயர் நாடுகளில் காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி மல்ரி பில்லியன் வியாபாரம் உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் புலிகள் தடைசெய்யப்பட்டிருந்தாலும் புலிகளின் சின்னங்களோ, பிரபாகரனோ தடை செய்யப்படவில்லை. ஒசாமா பின்லாடனின் படத்தை இந்தியத் தெருக்களில் கொண்டுசெல்லும் ஒருவர் சிறைப்பிடிக்கப்படுவார். அதே காராணங்களுக்காக இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவரின் படத்துடன் அரசியல் கட்சி நடத்தினால் அது தடைக்கு உள்ளாகாது. இவற்றிற்குரிய காரணம் இன்று புலிகளின் இருப்பு பல்தேசிய வியாபார அமைப்பாக மாறிவிட்டது. வியாபாரிகள், மொள்ளைமாரிகள் முடிச்சவிக்கிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்ற அனைத்துத் தரப்பிற்கும் பயன்படும் அடையாளமாகவும் அமைப்பாகவும் புலிகள் சார்ந்த அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடையை நீக்கவும் புலிகளை மீண்டும் மீட்சி பெறச் செய்யவும் மேற்கு நாடுகளுக்கு எதுவுத சங்கடமும் கிடையாது.

புலிகள் மட்டுமல்ல சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய அனைத்து இயக்கங்களும் இந்திய அரசு அல்லது மேற்கு ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலையே முன்வைத்தன. புலிகள் எப்போதும் ஐரோப்பிய நாடுகளோடு முரண்பட்டதில்லை. மறுபக்கத்தில் மேற்கு ஏகாதிபத்தியங்களால் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக் குழுக்கள் போன்று கையாளப்பட்ட புலிகள் அதற்கான தேவை அற்றுப்போன போது அழிக்கப்பட்டனர்.

ராஜபக்ச அரசு புலிகள் தொடர்ந்து செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதால் தாம் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று தடை தொடர்பான சச்சரவுகளுக்குச் சற்று முன்னதாகவே பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டது. புலிகள் இல்லாத காரணத்தால் எதிரிகளை இழந்து போயிருந்த ராஜபக்ச அரசிற்குத் தடை உத்தரவு வரபிரசாதமாக அமைந்தது. ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் இக் காலப்பகுதியில் புலிகள் மீள்கிறார்கள் என்ற பிரச்சாரம் ராஜபக்சவின் இழந்த செல்வாக்கை மீட்க உதவும்.

புலிகள் இல்லாத சூழலில் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராத்திற்கான புதிய அரசியல் உலகம் முழுவதும் மக்கள் மத்தியிலிருந்து தோன்றும் நிலையில் அவற்றை அழிப்பதற்கு புலிகளை மீட்பது ஐரோப்பிய அரசுகளுக்கு அவசியமாகின்றது.

1. ராஜபக்ச அரசிற்குப் புத்துயிர் வழங்கவும்,

2. முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கவும்,

3. புதிய ஜனநாயக முற்போக்கு அரசியல் இயக்கங்களை அழிக்கவும்,

4. வடக்குக் கிழக்கை மேலும் அதிக வேகத்தில் இராணுவ மயப்படுத்தவும்புலிகளின் மீட்சியும் தடை நீக்கமும் அவசியமாகிறது.

இதற்காகவே ஏகாதிபத்தியங்கள், பல்தேசிய நிறுவனங்கள், புலி வியாபாரிகள், இலங்கை இனக்கொலை அரசு ஆகியன ஒன்றிணைந்து புலிகளின் தடை நீக்கத்தை முன்மொழிகின்றன.

கோத்தாபய தெற்காசியாவை மையமாகக் கொண்டு ரக்ன ஆக்ச லங்கா மற்றும் அவன்கார்ட் மரி ரைம் என்ற இரண்டு தனியார் கடற்படை மற்றும் இராணுவ அமைப்புக்களை தோற்றுவித்துள்ளார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடற்படை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதால் அதற்கு ஆயுதங்களை வழங்கியதாக பிரித்தானிய அரசு தெரிவித்தது. கடந்தவாரம் இந்தியக் கடற்படை போர்க்கப்பலை வழங்கியது மட்டுமல்ல கோத்தாவிடமிருந்து தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. புலிகளின் தடையை நீக்குவதன் ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தை இராணுவ மயப்படுத்தவும் இனப்படுகொலையைத் தொடரவும் தடையின்றி வழிகளைத் திறந்துவிட அனைத்து நாசகார சக்திகளும் முயல்கின்றன.

Exit mobile version