15.10.2008.
விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வாஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் முயலக் கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசாங்கத்துக்கு யுத்தம் செய்யவே மக்கள் ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; கடந்த காலங்களைப் போன்று இன்றும் விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கருணாநிதி உட்பட புலி சார்பான அரசியல் கட்சிகள் இலங்கையில் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை நடத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவரை பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் கே. ஏ. நாராயணன் அழைத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறும், தமிழ் சிவிலியன்களை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இந்தியா அல்ல எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் யுத்தத்தை ஜனாதிபதியால் நிறுத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை வழங்கினர். இதனை மீறுவது மக்களின் சுயாதிபத்தியத்தை மீறும் செயலாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சிகள், பணம் வழங்கி இந்தியாவே போஷித்தது. இறுதியில் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்தனர்.
எனவே புலிகளை பாதுகாக்க முனைவதென்பது மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே புரிவதாக அமையும். முன்னோக்கிச் செல்லும் யுத்தத்தை பின்னோக்கி முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளல் ஆகாது. இந்திய அரசாங்கம் இங்கு யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும்.