Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளையும் சம்பிக்கவையும் துணைக்கு அழைத்து மிரட்டும் மகிந்த பாசிசம்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை.

புலிகள் போல் நிபந்தனைகளை விதித்துக்கொண்டு பேச்சுக்கு வராமல் வேறு அழுத்தங்களைக் கொடுப்பது தவறு. உலகத் தலைவர்களுடன் நான் பேச்சுகளை நடத்தும் போது இந்த நிலைமையைத்தான் விளக்கிக் கூறுகிறேன். இது எனது தனிப்பட்ட விடயமல்ல. இது அனைவரினதும் பொறுப்பு. இதற்கு முன்வராத கட்சி பொறுப்பிலிருந்து தவறிய ஒரு கட்சியாகவே கருதப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இணைய ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் சேறு பூசும் செயற்பாடுகள் குறித்து அரசு முழுக்கவனமும் கொண்டுள்ளது. ஊடகத் தர்மத்தை மீறும் எவரும் தாம் செய்வது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடாது.

எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் சிநேகபூர்வ முறையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு கையாளும். எவ்வாறாயினும், எமது நாட்டின் பாதுகாப்பு, இறைமை எவருக்கும் தாரைவார்க்கப்படமாட்டாது. எந்த சக்திக்கும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களுடன் நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version