இந்த அறிக்கையில் தம்மிடம் நேரடிச்சாட்சிளும் ஆதாரங்களும் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது. நேரடிச் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் தம்மாலும் ஏனைய தன்னார்வ நிறுவனங்களாலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
புலிகள் மனிதக் கேடயங்களைப் பயன்படுத்தியதாகவும், குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்தியதாகவும் கூறும் மன்னிப்புச் சபையின் அறிக்கை இலங்கை அரசபடைகள் மக்கள் குடியிருப்புக்களில் தாக்குதல் நடத்தியதாகவும், போர்ப் பகுதிக்குள் சிக்குண்ட மக்கள் அடிப்படை உணவு நீர் மருத்துவ வசதிகள் இன்றித் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறது. போர் முடிந்ததும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர் என்றும், புலி சந்தேக நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சித்திவதைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் பலர் காணாமல் போயினர் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியதை யாரும் மறுக்கவில்லை எனினும் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது என்பதையும் பெரும்பாலன தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் இலங்கை அரசாங்கமே அறிவித்துள்ளது. புலிகள் அமைப்பின் அரசியல் வழிமுறை தொடர்பான விவாதங்களுக்கு அப்பால் அவர்கள் இலங்கை அரச தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக எதிர்புப் போராட்டம் நடத்துவதற்கு நிர்ப்பந்திகப்பட்டனர் என்பது இங்கு திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.
இனப்படுகொலைக்குப் பணிக்கப்பட்ட இராணுவத்தையும் எஞ்சியிருக்கும் அப்பாவிப் போராளிகளையும் சம நிலைப்படுத்தி போராளிகளை அழிப்பதற்கான முயற்சிக்கே சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையின் ஊடாக முன்னுரை வழங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும் உலகம் முழுவதிலும் வாழும் போராளிகள் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படும் அவலத்திற்கு இது முன்னோட்டமா என்ற கேள்வி எழுகின்றது.
அமெரிக்காவும் இந்தியாவும் வரிசையாக வந்து காப்பாற்றும் என போலி நம்பிக்கைகளை விதைத்து புலிகளின் தலைமையை முள்ளிவாக்காலுக்குள் முடக்கி அழித்த நபர்கள் புலம் பெயர் புலிகளாக மாறினர். இதே தலைகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்த விமர்சமும் இல்லாமல் போர்க்குற்ற விசாரணையை ஐ.நாவிடம் தாரைவார்த்துக்கொடுத்து எஞ்சியுள்ள போராளிகளையும் அழிக்க முனைகின்றனர். போராளிகள் பலரை புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசுகளும் ஐ.நாவும் இணைந்தே போர்க்குற்றவாளிகள் என இலங்கைக்குத் திருப்பி அனுப்புகின்றன.
ஐநாவின் விசாரணைகளுக்கு நிபந்தனை விதிப்பதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமானது.