Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளுக்கு ஆதரவனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார்.

தோல்வியடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.
அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.
தமிழருக்கு என தமிழீழம் உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது.
எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமான், கருணாநிதி, வைகோ, திருமாவளவன் போன்ற இந்திய ஒருமைப்பாட்டு வகையறாக்கள் இனிமேல் தமது அரசியலை வேறு திசையில் மாற்றிக்கொள்ளக் கூடும்.

Exit mobile version