Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடம்பெறாத சம்பவத்துக்கு எவ்வாறு பதில் அளிப்பது: ஐ.நா.வின் கேள்வி தொடர்பாக பிரதமர் பதில்!

வன்னி இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டங்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பான சம்பவம் பற்றி விளக்கமளிக்குமாறு ஐ.நா. இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருக்கும் நிலையில், இல்லாததொரு சம்பவம் பற்றி எவ்வாறு சாட்சியங்களுடன் பதிலளிப்பது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கேள்வி எழுப்பினார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பிரிவு பிரதானிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் விக்கிரமநாயக்க இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியிட்டு ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதிக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான அல்லது மன விருப்பப்படி மரண தண்டனை விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரான பிலிப் அல்ஸ்ரன் எழுதிய கடிதத்தில் மே மாதம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக் கட்டங்களின் போது புலிகளின் 3 சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் மரணத்திற்கான சூழ்நிலைகள் தொடர்பாக விளக்கமளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 13 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் எதிரணி பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா (இராணுவ முன்னாள் தளபதி) கூறிய, கருத்தாக வெளியிடப்பட்ட செய்தியையே பிலிப் அல்ஸ்ரன் இதற்கான ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தார். மேற்குறித்த குற்றச்சாட்டு உண்மையா என்றும் அப்படி இல்லாவிட்டால் அது உண்மையற்றது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறும் பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க;
“மே மாதம் 17 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட நடவடிக்கையின் போது இடம்பெற்ற பெயர் குறிப்பிடப்பட்ட மூவரதும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களினதும் மரணங்கள் தொடர்பிலேயே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இராணுவத்திடம் சரணடைய முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சண்டே லீடர் பத்திரிகையில் (ஜெனரல் பொன்சேகாவை மேற்கோள்காட்டி) வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. நாம் அந்த நபருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ பேச விரும்பவில்லை. எனினும் எமது உள்விவகாரங்களில் தலையிடுவதற்குக் கதவைத் திறக்கவும் நாம் தயாரில்லை எப்படியிருப்பினும் நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன்று கதவு திறக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த சூழ்நிலையில் நாம் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு நாட்டைப் பற்றி சிந்தித்து நாம் இணைந்து செயற்பட வேண்டும்.
எவ்வாறிருப்பினும் இது கவலைக்குரிய சம்பவமாகும். எமது உள்விவகாரங்களில் ஐ.நா.வும் ஏனைய நாடுகளும் தலையீடு செய்தால் அது எங்கே போய் முடியுமோ. எனவே நாம் எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இலங்கை ஐ.நா.வின் உறுப்பு நாடு என்ற வகையில் இதற்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது. எனினும் இடம்பெறாதவொரு சம்பவம் பற்றி நாம் எப்படி சாட்சியங்களுடன் பதிலளிப்பது என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. முன்னரும் தேவையில்லாத விடயத்துக்குள் சிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த முயற்சிகள் யாவும் தோல்வி கண்டன. எனவே நாட்டினது இறைமைக்கும் பிரஜைகளின் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட நாம் அனைத்து மக்களும் ஒன்றாக ஐக்கியப்பட வேண்டும்%27 என்று கூறினார்.

இந்த நிகழ்வில் ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் கலந்துகொண்டனர்.

Exit mobile version