Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ltteஇலங்கை அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக சர்வதேச சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகின்றது.

அதற்கும் மேலாக போர்க்குற்றவாளிகளான இலங்கை அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்றும் அதே தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர்க் குற்றங்கள் என்று அழைக்கப்படும் சர்வதேச போர் நியமங்களுக்கு மாறான போர் வழிமுறைகளைப் பயன்படுத்தியமைக்காக வழங்கப்படும் தண்டனை. இன்று அமரிக்கா தலைமையிலான நாடுகளின் அணி போர்க் குற்றம் என்பதை நாடுகளை ஆக்கிரமிக்கவும் வழங்களை சூறையாடவும் பயன்படுத்திக்கொள்கின்றது. தவிர மக்களின் விடுதலை சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இதுவரை போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டதான வரலாறு கிடையாது.
இது ஒருபுறமிருக்க ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுகுவித்த ராஜபக்ச பாசிஸ்டுக்களைத் தண்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையேந்தும் நாடுகள் எதுவும் தயாரகவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களைத் தண்டிப்பதற்கு அந்த அமைப்பின் பாராளுமன்ற அரசியல்ல் பிரிவாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது .

புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருந்த முக்கிய தலைவர்கள் இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர். ஆக. ஆணையின் கீழ்ப் போராடிய அப்பாவிப் போராளிகளே எஞ்சியுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோருக்கு என்ன கதி என்பதே தெரியாது. ஆக தமிழீழ விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் பிரிவு போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. இதன் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதே நடத்தப்பட வேண்டும்.

தவிர, இலங்கை அரசுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக மேலும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்குற்றவாளிகளுடன் இணைந்து செயற்படத் தயாரா என்ற கேள்விகளெல்லாம் எழ முன்னர், இவ்வாறு கூறுவதனூடாக இலங்கை அரசைப் போர்க்குற்றங்களிலிருந்தும் புனிதப்படுத்தியுள்ளது.

ஆக, இங்கு போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசின் மீதல்ல புலிகளின் மீதே நடத்தப்பட வேண்டும் என்ற முடிவிற்கு தமிழ் மேட்டுக்குடிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதா என்ற கேள்வி தர்க்கரீதியானது.

Exit mobile version