மக்கள் சார்ந்த மக்களின் நலன்களுக்காகப் போராடும் ஒரு கட்சி மக்களை நேசிக்கவேண்டும். ஒரு பகுதி மக்களின் அழிவில் மற்றொரு பகுதியினரைக் காப்பாற்றுதல் என்பது போராட்டமல்ல. உலகின் அதிபயங்கர ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும், மாபியக் குழுக்களும் குழந்தைகள் உட்பட இளைய சமூகத்தின் ஒரு பகுதியையே கொன்றுகுவிக்கும் போதைப் பொருட்களின் விற்பனையில் மக்கள் சார்ந்த போராட்டம் நடத்த முடியாது. உலகின் மிகவும் பிந்தங்கிய சிந்தனையையும், பிற்போக்குக் கலாச்சாரத்தையும் கொண்ட சமூகம் ஒன்றின் மத்தியிலிருந்து எழுந்த விடுதலை இயக்கங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை போராட்டத்தை நோக்கி அணிதிரட்டவில்லை. மாறாக சமூகத்தை மேலும் மேலும் மனித நேயமற்ற பிற்போக்கு சேற்றுக்குள் அமிழ்த்தியுள்ளன. ஏனைய மக்கள் மீதும், தேசிய இனங்கள் மீது, வெறுப்பையும் வன்முறையையும் விதைக்கும் வக்கிரம் மிகுந்த, சுய நலம் மிக்க பிற்போக்கு தேசிய இனமாகவே தமிழ்த் தேசிய இனத்தைக் உலகின் ஜனநாயகவாதிகளுக்கும் போராடும் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் போன்ற தேசிய வெறிகொண்டவர்களாகவே உலகின் ஜனநாயக முற்போக்குப் பிரிவுகளுக்கு ஈழத் தமிழர்கள் குறித்த விம்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்திலுமிருந்து விடுதலை பெற்று, உலகின் நேர்மையான ஜனநாயக முற்போக்குப் பிரிவுகளோடு எம்மை அடையாளப்படுத்தும் பணி நீண்டது. அதற்கான சுய விமர்சனமும், விமர்சனமும் இன்றை எமது சமூகத்தின் தேவை.
இந்த நிலையில் அருளினியனின் இணையத் தளத்தில் சாத்திரி என்ற விடுதலைப் புலிகளின் முன்னை நாள் உறுப்பினர் வெளியிடும் தகவல்கள் முக்கியமானவை. இவற்றை சுயவிமர்சனமாக சமூக அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்வதும், இச்சம்பவங்களின் பின்னணியிலுள்ள அரசியலை அறிந்துகொள்ள முனைவதும் அவசியமானது. ராஜபக்ச பாசிஸ்டுக்களோ, பேரினவாதிகளோ அன்றி ஏகாதிபத்தியங்களோ குற்றமாக முன்வைப்பதற்குப் பதிலாக நாம் சுயவிமர்சனம் செய்வதும் அதனூடாக எதிர்காலத்தில் போராட்டத்தைச் செழுமைப்படுத்துவதும் அவசியமானது.
சாத்திரியின் நேர்காணலின் போதைப்பொரு ள் தொடர்பான பகுதிகள் கீழே:
புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?
ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின்போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப் பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையாக உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் உற்பத்தியாகும் போதைப் பொருட்களிற்கும். இமய மலைச் சாரலில் இயற்கையாக விளையும் கஞ்சாவிற்கும் மேலை நாடுகளில் ஏகப் பட்ட கிராக்கி இருக்கிறது. அவற்றை தரை மற்றும் கடல் வழியாக மும்பைக்கு கொண்டு வரப் பட்டு அவை சரக்கு கப்பல்கள் மூலம் மேற்கு நாடுகளிற்கு பயணமாகும்.
எந்த வருடத்தில் இருந்து புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்?
எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சிறிய அளவில் புளொட் அமைப்பும் புலிகளும் போதைப்பொருள் கடத்தலை தொடங்கியிருந்தாலும் 84 ம் ஆண்டு புலிகள் உறுப்பினர்கள் சிலர் மும்பையை மையமாக வைத்து கடத்தலை தொடங்கிய பின்னரே பரவலடைந்தது. சாதாரண கப்பல்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தலானது தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களே சொந்தமாக கப்பல்களை வாங்கி உலகளாவிய ரீதியில் செய்யத் தொடங்கியிருந்தனர்.
புலிகளின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை பொறுப்பாக நின்று வழி நடத்தியவர் யார்?
இது பல குழுக்களாக இயங்கியது. அதில் தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர் முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இறந்த புலிகளுக்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டதா?
யாரிற்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அது மட்டுமல்ல ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அதில் இறந்துபோனவர்கள், விபத்தில் மற்றும் கடுமையாக நோய்வாய் பட்டு இயற்கை மரணம் அடைந்த எவருமே முறையாகப் பெயர்கள் அறிவிக்கப்பட்டு மாவீரர்களாக கெளரவிக்கப்படவில்லை. விதிவிலக்காக கிட்டு சென்ற கப்பலில் இறந்தவர்களும் இறுதி சமாதான காலத்தின் போது தாக்கியழிக்கப்பட்ட ஒன்பது கப்பல்களில் இரண்டு கப்பல்களில் பயணித்தவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அவர்கள் மாவீரர்களாக கெளரவிக்கபட்டிருந்தனர்.
இப்படியாக எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
நூற்றியிருபதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். புலிகளின் தலைமை அவர்களை மாவீரர்களாக அறிவித்திருக்காவிட்டாலும். புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில் மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட புலிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையான உறவு எப்படி இருந்தது?
புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை.
அவரைப்பொறுத்தவரை ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும். அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.
நேர்காணலின் முழுமையான பகுதி:
http://aruliniyan.blogspot.in/2014/02/blog-post.html