கொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரித்திருக்கும் அரசாங்கம், வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
“”ஆயுதங்களைக் கைவிடாமல் புலிகளிடமிருந்து வெளியிடப்படும் எந்தவொரு போர் நிறுத்தப் பிரகடன அறிவிப்பும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என்று தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்காக புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களா என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டிய தேவை இருப்பதாக அரச சமாதான செயலக செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார். யுத்த நிறுத்தத்தின் போது அவர்கள் தமது பலத்தைக் கட்டியெழுப்பும் போக்கே வரலாற்று ரீதியாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன, யுத்த நிறுத்தப் பிரகடனம் தொடர்பாக அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனக் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல “இந்தப் பொறியில் அரசாங்கம் விழுந்து விடுமென நான் நினைக்கவில்லை. இந்த மாதிரியான அறிவிப்புகள் தொடர்பாக எமக்குப் போதியளவிலான அனுபவங்கள் கடந்த 30, 40 வருடங்களாக உண்டு’ என்று ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு நேற்று கூறியுள்ளார்.
வடக்கில் சகல முனைகளிலும் படையினர் முன்னேறிவரும் நிலையில் கடுமையாக தோற்கடிக்கப்படும் தருணத்திலேயே புலிகளிடமிருந்து யுத்த நிறுத்த அறிவிப்பு வெளிவந்திருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டிருப்பதுடன் இந்த மாதிரியான யுத்த நிறுத்த அறிவிப்புகள் ஆயுதங்களைக் கைவிடுவதென்ற முன் நிபந்தனையுடன் புலிகளிடமிருந்து வெளிவந்தால் எங்களால் பரிசீலனை செய்ய முடியும் என்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை பிரகடனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாங்கள் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவம் கூறியுள்ளது.
“இப்போதும் கூட நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்’ என்று இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார நேற்று ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.