வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எனினும் உயிரிழந்த மூன்றாம் நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும் நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி கோபியை தேடி வந்தனர்.
வியாழன் இரவு இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாக முன்னர் வெளியாகிய தகவல் தவறானது என்றும் அந்த இராணுவ சிப்பாய் வேறு ஓரிடத்தில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போதே உயிரிழந்ததாக இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் கோபி என்பவர் ஈடுபட்டிருந்ததாகவும், இவர் தன்னைத் தேடிச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திவிட்டு தப்பியோடியதாகவும் முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இலங்கை அரச பாசிசம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக தாமே தோற்றுவித்த கட்டுக்கதையே புலிகளின் மீள் உருவாக்கம். புலிகள் மீள்வார்கள் என்று கூறி புதிய மக்கள் சார்ந்த மாற்று அரசியலை நிராகரிக்கும், உளவு நிறுவனங்களின் கூலிப்படைகளான தமிழ் இனவாத அமைப்புக்களின் அரசியல் மீண்டும் தேவைப்படும் போது புலிகளை உருவாக்க இலங்கை அரசிற்குத் துணைசெல்லும்.
கோபி கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.