Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது: டக்ளஸ் தேவானந்தா.

 

விடுதலைப் புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது. விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் அதன் தலைமைத்துவத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். தற்பொழுது சரணடைந்திருக்கும் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வும், பொதுமன்னிப்பும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களும் நம்பிக்கையுடன் சரணடைவார்கள்” என்று டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

  தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை, விடுதலைப் புலித் தலைமைகளின் பிரச்சினையிலிருந்து வேறுபடுவதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்களையும், அதன் தலைமையையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கு அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணையவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கென நியாயமான விட்டுக்கொடுப்புக்குத் தயாரெனவும் கூறியுள்ளார்.
அரசியலுரிமையை வென்றெடுப்பதற்கும், சிதைந்துபோன வரலாற்று வாழ்விடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கும் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், சுயலாப அரசியல் முரண்பாடுகளால் பிரிந்து நின்று செயற்பட்டதாலேயே தமிழ் மக்களுக்குத் தற்பொழுது இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“அரச எதிர்ப்பு அரசியலென்பது தவறானதல்ல. ஆனாலும் அதனை வெறும் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்தாமல் அரசாங்கத்துடன் உடன்பட்டுப் போகவேண்டிய தருணங்களை உணர்ந்து செயற்படவேண்டும். யாருடன்பேசி எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமோ அவர்களுடன் பேசவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Exit mobile version