புலிகள், பிரபாகரன், புலிகளின் அடையாளங்கள் என்பன இலங்கை அரசும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்த் தலைவர்களும் இணைந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுகிறது என்று 2009 ஆம் ஆண்டிலிருந்து இனியொரு எழுதிவந்துள்ளது.
புலிகளின் தடை நீக்க வழக்கில் எதிர்த்தரப்பான இலங்கை அரசிடமிருந்து எவ்வகையான வாதங்களும் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அரச தரப்பிலிருந்து வழக்கில் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை. தவிர வழக்கு நடைபெறுவதற்கு சில மாதங்களின் முன்னர் கே.பி தனது பிரதிநிதிகளை ஐரோப்ப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகள் இருக்கும் வரை தான் ஆட்சியிலிருப்பேன் என புலிகளின் தடை நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்தின் முன்பு மகிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆக, புலிகளைக் காரணம் காட்டி தொடர்ந்து ஆட்சியில் நிலைப்பதற்கான அரசியல் வெளியை மகிந்த ராஜபக்ச ஏற்படுத்திக்கொள்ள தடை நீக்கம் வழிசெய்கிறது.
இதனைத் தவிர புலம்பெயர் நாடுகளிலுள்ள புலிகளின் மில்லியன் கணக்கான சொத்துக்களைக் கையகப்படுத்தவும் தடை நீக்கம் சார்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் பருதி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சொத்து விவகாரம் பிரதான காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவிலான சொத்துக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சட்ட ரீதியான உரிமை முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் முயற்சி எனவும், இதன் காரணமாகவே புலிகள் மீதான தடை நீக்கப்படுவதனை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான தடை முற்றாக நீக்கப்பட்டால் பெருமளவு பணமும் சொத்துக்களும் கிடைக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தடை நீக்கம் என்பது இலங்கை அரசு, புலம்பெயர் புலி வியாபாரிகள் போன்றோர் இணைந்த சதியே என்பது இப்போது துலங்கத் தொடங்கியுள்ளது.
தொடர்பான பதிவுகள்:
புலிகள் மீதான தடை நீக்க உத்தரவின் பின்புலம்