Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் சொத்துக்கள் : முழுமையான விபரங்கள்

விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் கப்பல்கள், வங்கி கணக்குகள் உட்பட அவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததும் அவை பற்றிய முழுமையான விபரங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. விடுத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2008 மே 18ஆம் திகதிக்கு பின்னர் புலிகளிடமிருந்த சொத்துக்கள், தங்கம் தொடர்பான விபரங்களை புலனாய்வு பிரிவினர் திரட்டினர். தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கே.பி.யின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கப்பல்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டன. அதில் சிலவற்றை எமது கடற்படையினர் அழித்தொழித்துள்ளனர்.

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள், எமது நாட்டின் சொத்துக்கள், மக்களின் சொத்து, அவை நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும்.

புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள தகவல்களை வெளியிட்டால் அது எதிர்கால விசாரணைக்கு இடையூறாக இருக்கும். விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்ததன் பின்னர் தகவல்களை பாராளுமன்றத்திற்கு தருகின்றோம் என்றார். முன்னதாக கேள்வி எழுப்பிய ஜோசப் மைக்கல் பெரேரா,விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்த மே 18ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் கைப்பற்றப்ப்டுள்ளன. பாரிய தொகை தங்கம் நவம்பர் 26ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி கே.பி. கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புலிகளுக்கு சொந்தமான பணம் மற்றும் ஏனைய சொத்துககள் தொடர்பான சகல தகவல்களையும் விசாரணைகளின் போது வெளிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தகவல்களையும் புலிகளின் சொத்துக்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version