31.01.2009.
முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது 4 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ள ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன இவர்களில் 2.000 பேர் கர்ப்பிணித் தாய்மார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளதுடன்;வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்த தமது ஆழ்ந்த அக்கறையை கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் வெளியிட்ட இவர்,அப்பாவிகளில் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் விதமாக நடந்துகொள்ளவேண்டாம் என்று இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
“மோதலுக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இருக்கிறது. காமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்துக்கும், உணவு மற்றும் மருந்துப் பொருள் விநியோகத்துக்கும் இருதரப்பும் கூட்டாக இடமளிக்கவேண்டும்” என்றார் வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன.
இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைக் கண்டறிவதற்காக வன்னிக்குச் செல்வதற்கு 2008 டிசம்பர் 31ம் திகதி பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாக இங்கு குறிப்பிட்ட ஜயவர்த்தன, மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் செயலாளர் என்ற வகையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் செல்வதற்கும் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
‘பாதுகாப்பு’ என்பதைக் காரணம் காட்டி வன்னி செல்ல அனுமதிக்காத அரசாங்கம், அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் நலன்புரி நிலையங்களுக்குச் செல்வதற்கும் அனுமதி மறுத்ததை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் இங்கு தெரிவித்தார்.
“தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் குழவொன்றை அரசாங்கம் வன்னிக்கு அழைத்துச்செல்ல முடியுமானால், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அங்கு செல்வதை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும்? ஜனநாயகம், நடமாடும் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பன அச்சுறுத்தலுக்குள்ளாயுள்ளன என்ற எமது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை இது தெளிவாக நிரூபிக்கிறது” என்று மேலும் இங்கு குறிப்பிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன.
நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுக்கும் முப்படையினரையும், பொலிசாரையும் பாராட்டுவதாக இங்கு தெரிவித்த அவர், எனினும், அவர்களுடைய வெற்றி முழு இலங்கையர்களுக்கும் சொந்தமானதே தவிர, தனித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குச் சொந்தமானதல்ல என்று சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதை ஐ.தே.க. ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும், எல்லா மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கக்கூடிய ஐக்கிய இலங்கைக்காக ஐ.தே.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன மேலும் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.