31.082008
விடுதலைப் புலிகளின் ஆயுத மையங்களைக் கண்டறியும் புதியவகை ராடர் கருவி ஒன்றை அரசு கொள்வனவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வடபோர் முனையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளங்களை அறியும் பொருட்டு புதிய வகை ராடர்களை ஆசிய நாடு ஒன்றிடமிருந்து அரசு கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் புதிய வகை ராடர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மணலாறுப் பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினால், சுமார் ஐந்து விநாடிகளுக்குள் அந்த ஆயுதம் எங்கு வைத்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டறியும் சக்திகொண்ட இந்தப் புதியவகை ராடர், அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஆட்லறிகளுக்கு, விடுதலைப் புலிகளின் குறிப்பிட்ட ஆயுதம் அமைந்துள்ள தளத்தை நோக்கித் தாக்குதல் நடத்துவதற்கான கட்டளையை வழங்கும் என்று இந்தப் புதியவகை ராடர் தொடர்பாக இராணுவ வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
கடந்த மே மாதம் அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்ட புதிய ரக ராடர்கள் போன்ற அமைப்புக்கொண்டவற்றையே தற்போது அரசு கொள்வனவு செய்திருப்பதாகவும் இவை இந்தியா வாங்கியவை போல் அல்லாது விலை குறைந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது