Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளினால் 50% மான மக்கள் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்:பாக்கியசோதி சரவணமுத்து .

12.12.2008.

மனித உரிமை மீறல் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதல் எட்டு நாடுகளில் அடங்கியுள்ளதாக நியூயோர்க்கிலுள்ள இனப்படுகொலையை தடுப்புத் திட்டம் என்ற செயலணிக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 16 நாடுகளுக்கு வழங்கும் ஜிஎஸ்பி+ சலுகையை வழங்கியுள்ள போதும் எல்.சல்வடோருக்கும் இலங்கைக்கும் 6 மாத தவணை வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மனித உரிமை தொடர்பில் ஆராய்ந்தே நீடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புலிகளினால் 50% மான மக்கள் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேசத்தில் அவ்வமைப்பு தடை செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கு மக்களைப் பாதுகாப்பது கடமையாகும்.

காணாமல் போதல், படுகொலை, ஆட்கடத்தலுக்கு எதிரான ஒன்றியம் மனித உரிமை தினத்தையொட்டி நேற்று முன்தினம் புதன் கிழமை கொழும்பு பொது நூலகத்தில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் டாக்டர் பா. சரவணமுத்து   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

இன்று உலகளாவிய ரீதியில் மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. ஜனநாயக நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெற்றால் அங்கு ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும்.

தினசரிப் பத்திரிகைகளை இன்று பார்த்தால் மனித உரிமை மீறல்கள் குறித்து செய்திகளைப் பார்க்க முடியும். மோதல் இடம்பெறும் வன்னியில் மோதலினால் 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு, மருந்து, உடு புடவை என்பன தேவையாகவுள்ளன.

அங்கு ஐ.நா. முகவரமைப்போ அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்களோ இல்லை. மக்களைப் பாதுகாப்பது அவசியமானது. தேவைகளை உடனடியாக வழங்க முடியாதுள்ளது.

இராணுவத் தளபதி சிறுபான்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிங்கள மக்களே நாட்டுக்குச் சொந்தமென கூறியுள்ளார். இவ்வாறான கருத்துகளால் எவ்வாறு நாட்டில் சமாதானம் ஏற்படும். சகல இன மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்படுவதன் மூலம் ஒன்றிணைய முடியும்.

இதேவேளை, 17 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து நாட்டில் சுதந்திரமாக மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமென ட்ரான்ஸ் பேரன்சியின் பணிப்பாளர் வெலியமுல்ல தெரிவித்ததுடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Exit mobile version