Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளால் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களை விட அரசு கடுமையாக மீறுகின்றது: மனோ கணேசன்.

 

விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறுகின்ற அரசாங்கம், மக்களை முட்கம்பி முகாம்களுக்குள் வைத்திருக்கும் இச்செய்கை அரச பயங்கரவாதம் இல்லையா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தாய் யானையிடம் இருந்து குட்டியானைகளை பலவந்தமாக பிரிப்பதை பெரும் அநியாயமாக கருதி ஓலமிடும் இந்நாட்டில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் முட்கம்பி முகாம்களுக்குள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அரச பயங்கரவாம் இல்லையா? முறையாக தெரிவு செய்யப்பட்ட ஒர் அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள் போல் செயற்படுவதற்கு உரிமை இல்லை. அன்று விடுதலை புலிகளால் மீறப்பட்டதாக  
  கூறப்படும் மனித உரிமை மீறல்களை இன்று அரசாங்கம் அதைவிட கடுமையாக மீறுகின்றது.” எனத் தெரிவித்தார்.

பண்டாரவளையில் தன்னை சந்தித்து வடபகுதி முகாம்கள் பற்றி கலந்துரையாடல் நடத்திய சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது,

‘அன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தொகை 70 ஆயிரம் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் அது இன்று மூன்று இலட்சமாக அதிகரித்துள்ளது. அரசாங்கம் மக்களை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வரும்படி கூறி விமானம் மூலம் துண்டு பிரசுரங்களை போட்டு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மக்களும் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துசேர்ந்தனர்.” எனக் குறிப்பிட்டார்.

‘ஆனால் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைகூட பூர்த்தி செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது. இத்தேவைகளை அரசாங்கத்தினால் ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியாது. இதனால் இன்று இங்கு வாழும் மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நோய்வாய்ப்படுகின்றனர். பலர் நோய்களினால் இறந்துபோகின்றனர். சிலர் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்கின்றார்கள்.” எனவும் கூறியுள்ளார்.

‘இக்காரணங்களினால் குழந்தைகளும், பெண்களும் மற்றும் வயோதிபர்களும் அனாதைகளாக்கப்படுகின்றார்கள். விசேடமாக இங்கு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைகாணப்படுகின்றது. தண்ணீர், உணவு, மருந்து இவற்றை பெற்றுக்கொள்வதற்காக 24 மணித்தியாலங்களும் வரிசையில் நிற்கவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை மறைப்பதற்காக அரசாங்கம் பண்பற்ற முறையிலேயே செயற்படுகின்றது.” என்றும் சொன்னார்.

‘வடபகுதி முகாம்களுக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கும், ஊடகங்களுக்கும் சுயாதீனமாக செல்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இவ்விதமான ஒரு மனிதாபிமானமற்ற செயற்பாடு எந்தவொரு நாட்டிலோ எந்த ஒரு முகாமிலோ காண்பதற்கில்லை. இம்முகாம்கள் சிறை முகாம்களாகும். இவையே இந்த அரசாங்கம் நமது மக்களுக்கு ஆற்றும் பணிகளாகும். ஜனாதிபதி ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார இடம்பெயர்ந்துள்ள மக்கள் வாழும் முகாம்களை பாதாள நரகம் என குறிப்பிட்டிருந்தார்.” எனவும் சுட்டிக்காட்டினார்.

‘அதேபோல் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா இவை வெட்டவெளி சிறை முகாம்கள் என குறிப்பிட்டிருந்தார். இதைவிட இதைபற்றி குறிப்பிடுவதற்கு அகராதிகளிலே வேறு வார்த்கைகள் இருக்கின்றனவா என நான் தேடி வருகின்றேன். நிச்சயமாகவே இந்த முகாம்கள் சர்வ தேசியம் ஏற்றுக்கொண்ட அடிப்படை மனித உரிமைகளை மீறியே நடத்தப்படுகின்றன.” எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version