Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம் பெயர் தமிழர்கள் குறித்து அரச துணைக்குழுத் தலைவர் கருணா

யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளும் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினைகளை உண்டுபண்ண எத்தணிக்கிறார்கள். நாம் அனைவரும் இலங்கையர் என்ற முறையில் ஒன்று பட்டு இத்தகைய வெளிநாட்டு சக்திகளுக்கு எமது ஏகோபித்த எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முறிகண்டி இந்து மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்தை வெளியிட்டார். இவ் வைபவத்தில் பிரதம அதிதிகளாக அம்பாந்தோட்டை தொகுதியின் பாராளு மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ, மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், நிர்மாணத்துறை பொறியியல் சேவை வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில், இலங்கையில் இன்று 30 ஆண்டு கால யுத்தம் முடிவுற்றமை குறித்து சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில உயர் அதிகாரிகளும், மன வேதனையில் இருப்பதனால் தான் இலங்கைக்கு எதிரான பலதரப்பட்ட தீய செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டி ருப்பதையே பெரிதும் விரும்புவதாகவும் நாட்டை பிளவுபடுத்துவதே இத்தகைய தீய சக்திகளின் குறிக்கோளாக இருக்கிற தென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

‘‘நான் சிறுவனாக இருந்த போது எங்கள் பிரதேசத்திற்கு ஆடம்பரமாக போலி வேடமணிந்து வந்த அரசியல் வாதிகளைப் பார்த்து ஏமாந்து போனேன். அதனால் தான் கல்வியை இடை நடுவில் நிறுத்திக் கொண்டு காடுகளில் தஞ்சமடைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டேன்.

என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுத்த இந்த அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டம் பெறவைத்தனர். நாங்கள் படிப்பையும், கல்வியையும் சீர்குலைத்துக் கொண்டோம். இன்று நாம் உண்மை எது, போலி எது என்பதை புரிந்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் நல்வழியில் ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்து விட்டோம்” என்று பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உணர்வு பூர்வமாக கூறினார். சில அரசியல்வாதிகள் இன்றும் கூட சிங்கப்பூருக்கு சென்று இனப்பிரச்சினை குறித்து மாநாடுகளை நடத்துகிறார்கள். அவர்கள் அதற்கு பதில் ஏன் கிளிநொச்சிக்கோ, மட்டக்களப்பிற்கோ வந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தும், ஏனைய உதவிகளையும் செய்து கொடுக்க தயங்குகிறார்கள் என்றும் பிரதி அமைச்சர் வினா எழுப்பினார். டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Exit mobile version