24.03.2009.
இலங்கை அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்கள் மீதான படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கக் கோரியும் புலம் பெயர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கவன ஈர்ப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் போன்றவற்றால் இலங்கை அரசு மீது அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து அதனை முறியடிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் இரண்டு நாள் மாநாடு ஒன்றைக் கூட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்வரும் மார்ச் 28‐29 திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் புலம் பெயர்ந்து வாழும் சில தமிழ் பிரமுகர்களையும் அழைப்பதனூடாக, அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளுக்கும் எதிர்காலத் தீர்வு நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஆதரவு தமக்கு இருப்பதை எடுத்துக் காட்டுவதே இம்மாநாட்டின் நோக்கம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இம்மாநாட்டுக்கான அழைப்புக் கடிதங்கள் வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் முதல்நாளான மார்ச் 28ம் திகதி போருக்குப் பின்னான நிலைமைகள் முன்னோக்கிச் செல்லுதல் என்ற தலைப்பில் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம உரையாற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் திஸ்ஸவிதாரண அதிகாரப்பகிர்வுக்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். தொடர்ந்து சிவில் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உரையாற்றுகிறார்.
மாலை அமர்வில் வடக்கு மீளெழுச்சிப் பாதையில் என்ற தலைப்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தலைமையில் எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் குழுக்கலந்துரையாடல் இடம்பெறும். அமைச்சர் திஸ்ஸவிதாரண ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜகபக்ச மற்றும் பாலிதகோகன்ன ஆகியோர் இக்கலந்துரையாடலில் கருத்துரைக்கவுள்ளார்கள்.
அவர்களோடு புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து அழைக்கப்படும் தமிழ் பிரமுகர்கள் சிலரும் கருத்துரைக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.
மறுநாளான 29ஆம் திகதி மாநாட்டில் கலந்து கொண்டோர் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலும் ஆலோசனைப் பரிமாறல்களும் இடம் பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
மாநாட்டின் முடிவில் இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளை ஆதரித்தும் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவிருக்கும் அரைகுறைத் தீர்வுத் திட்டத்தை வரவேற்றும் அறிக்கையொன்று மாநாட்டுத் தீர்மான வடிவில் வெளியிடப்படவிருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே இம்மாநாட்டை இந்தியாவில் நடாத்தத் தீர்மானித்திருந்ததாகவும், எனினும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவு சக்திகள் உத்வேகமடைந்திருப்பதனால் அங்கு நடாத்துவது உசிதமில்லை எனக்கருதப்பட்டதால் இம்மாநாடு சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
பிந்திக் கிடைத்த தகவல் ஒன்றின்படி இந்த மகாநாடு சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தமது நோக்கத்திற்கமைய இந்த மகாநாட்டை நடத்த முற்பட்ட நிலையில் சிங்கப்பூரிலும் மகாநாட்டிற்கான அனுமதி குறித்து சர்ச்சைகள் எழுந்தமையால் கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த மகாநாட்டில் கலந்துகொள்ள இணங்கிய புலம்பெயர் அரச ஆதரவாளர்கள் பலர்தற்போது பின்வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.