நாற்பது வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில் வாழ்கிறோம். இதனிடையே நம்மை நாமே மறுவிசாரணை செய்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் எதிர்கால சந்ததிக்கு உண்மைகளை விட்டுச் செல்வதும் அவசியமான பணி. மக்கள் மத்தியில் அவர்களின் பலம் மீதான நம்பிக்கயீனத்தை ஏற்படுத்தி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அன்னிய தேச உளவாளிகளிடம் சரணடையக் கோரும் பிழைப்புவாதிகளின் கூட்டம் உருவாகியிருக்கின்றது. ஆட்சேர்த்துக்கொள்வதும், அடையாளத்தை தோற்றுவித்து பிழைப்பு நடத்துவதும் இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்ட மக்களின் அவலங்களை தொடர்கதையாக்குகின்றது.
இந்த நிலையில் புலம் பெயர் அரசியலில் தனது பங்களிப்புக் குறித்தும் அதன் பொதுவான இன்றைய நிலை குறித்தும் ஸ்கந்ததேவா தனது கருத்துக்களை இனியொரு வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார். வெளிப்படையான அரசியல் விவாதங்களை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கந்ததேவாவின் தொடர் கட்டுரை இனியொருவில் வரும் வாரத்திலிருந்து வெளியாகிறது. தேசியவாத அரசியலில் முள்ளிவாய்க்கால் அழிவுகளை ஒட்டிய காலத்தில் முக்கிய பங்குவகித்தவர் ஸ்கந்ததேவா. பிரித்தானிய தமிழர் பேரவையில்(BTF) ருந்தவர் ஸ்கந்ததேவா.
ஸ்கந்தா அவர்களின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல. வெளிப்படையான விவாதம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலும், புலம்பெயர் அரசியலின் வெளிப்படைத் தன்மையைப் பேணும் நோக்கிலும் இத் தொடர் பதிவு வெளியாகின்றது.