Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் உறவுகளே – ஒரு மடலின் கண்ணீர் .. .. : உமா

நிலம் காக்கும் கனவோடு பணந்தந்தீர் – நம்
இன்றெம் கண்ணீர் காக்கவும்
இதயந் திறக்கீரா?

பசிக்குணவோ பாலருக்குப் பால்மாவோ
வாங்குதற்காய்க் கேட்கவில்லை.
பட்டினி கிடப்பதெப்படி என்பதை
மகிந்த மகராசன் பங்கருக்குள்
இருந்தபோதே பழக்கித் தந்தார்
எப்படியோ சமாளிப்பம்

ஆனால்
கருத்தடை மாத்திரைதான்
கனகாசாக் கிடக்குதிங்கே

தாயைச் சிறுவயதில் தவறவிட்டாரும் – சகோதரியின்றித்
தனியாய்ப் பிறந்தவருமாய்த்தான்
பலராணுவம் இங்கு தமிழரைக் காக்கும் பணியில் ..
நிலைமை அப்படி, நிம்மதி எப்படி?

மானமிழப்பினும்; கவலையில்லை ஒருநாள் நோவுதான்
கருவானாலோ காலமெல்லாம் சாவுதான்
அதனால்தான் கேட்கின்றோம் .. ..

தன்மானம் உயிரெனக் கொண்டால்
பெண்ணில்லா ஊரெனும்
மண்தான் மீதமிருக்கும்
அதுவுமக்குச் சம்மதமா?

ஊனமுற்ற உறவுகள்
உடல் மெலிந்த பிள்ளைகள்
திடம் கொண்ட நாம்தானே – இன்றவரின்
நடமாடும் போக்கிடம் .. ..

பெருந்தேசியக் கோபத்துக்குக் காரணம் பிரபாகரனே எனும்
எங்களவர் எவராவது
பிரபாகரன் செத்து ஆண்டிரண்டு ஆனதெனும்
விபரத்தை ஒருக்கால்
அப்பாவி ராணுவத்துக்குச் சொன்னால் கோடி புண்ணியம்

பாவம் அவர்கள்
தம் இதயச்சூடு குறைப்பதற்காய்
எம் இதயத்தில் சூடு வைக்கின்றார்கள்

தாங்கப் பிறந்தவர்தானே நாம்
தாங்கிடுவோம் ஆனால் – வயிற்றில்
தங்கினால்தான் வாழ்க்கையே போகிது
அதனால் தான் கேட்கிறோம் .. ..

பலம் போனாலென்ன நிலம் போனாலென்ன
விலைமதிப்பிலா மானம்தான் போனாலென்ன
வாழப் பிறந்தவர்க்குத்தானே கவலையெல்லாம்
மாளப் பிறந்தவர் எமக்கென்ன?

தாயைக் கொல்ல தனையனைப் பெறாவிட்டால்
போதும் எமக்கிப்போ
முடிந்தால் உதவி செய்யும் இல்லையேல்
விடிந்தால் மீண்டும் அதே செய்திதான்
தொடர்கதையாய் தொடர்ந்து வரும்.. ..

இவ்வண்ணம்
உயிரின்றி உலவும் உனதன்புச் சகோதரி

*பெற்றதும் குழந்தையைக் கிணற்றில் வீசிய தாய்| இன்றைய நாளேட்டுச் செய்தி

Exit mobile version