Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புரட்சியை அழிப்பதற்கு தயாராகிவிட்ட USAID

usaidஉலக நாடுகளில் மக்கள் போராடத் துணியும் போதும் தமது உள்நாட்டு அரசுகளுக்கு எதிராகப் அணிதிரளும் போதும் அந்த நாடுகள் மக்கள் போராட்டங்களை அழிக்கும் நவீன முறைகளைத் தன்னார்வ நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. வறிய உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழும் போது அவர்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் கடன் தொகையை வழங்கி அவர்களைத் தங்கி நிற்கும் சமூகமாக மாற்றிவிடுகின்றன. சாதிய, மத ரீதியில் வர்க்கங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைத்து அவற்றை அழித்துவிடுகின்றன.

இலங்கையில் வெலிவெரியாவில் சிங்கள அப்பாவிச் சிங்கள மக்களை ராஜபக்ச பாசிஸ்டுக்கள் கொலைசெய்த போது, பல சிங்களக் கிராமங்கள் கிளர்ந்தெழுந்தன. ஊடகங்கள் இலங்கை முழுவதும் மக்கள் எழுச்சிகள் ஏற்படும் என எச்சரித்தன. ஆனால் மனித உரிமை என்ற பெயரில் தலையிட்ட தன்னார்வ நிறுவனங்கள் தாம் பிரச்சனையை ஐ.நா வரை கொண்டு செல்வோம் என மக்களுக்கு போலி நம்பிக்கைகளை வழங்கி போராட்டத்தை அழித்தன. நேபாளத்தில் புரட்சி வெற்றிபெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே தன்னார்வ நிறுவனங்கள் அலையலையாக முகமிட ஆரம்பித்தன. இன்று ஐந்து ஆண்டுகளுக்குள் அங்கு 45 ஆயிரம் தன்னார்வ நிறுவனங்கள் முளைவிட்டுள்ளன.

தமிழ்ப் பேசும் மக்கள் மீது வன்னி இனவழிப்பு நடைபெற்ற பின்னர் பரவலாக இலங்கையில் எழுச்சிகளும் புதிய போராட்டங்களின் உயிர்ப்பும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், கொமன்வெல்த், யூ.எஸ் எயிட்ஸ் போன்ற தன்னார்வ நிறுவனங்கள் அழித்துச் சிதைத்து இன்று அவர்களின் முடிவில் தங்கி நிற்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளாலும், அமெரிக்க அரசாலும் உருவாக்கப்பட்ட பொஸ்னியா என்ற நாட்டில் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனைத் தடுப்பதற்கான அமெரிக்க – ஐரோப்பிய அதிகார வர்க்கங்கள் தமது வேலைகளின் பிரதான பகுதியாக தன்னார்வ நிறுவனங்கள் பல களத்தில் இறங்கியுள்ளன.
USAID என்ற அமெரிக்க அரசின் பணத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகவர்களை பொஸ்னியா மற்றும் ஹெர்சேகொவினாவில் அமர்த்தியுள்ளதாகக் கூறுகிறது.

Exit mobile version