புனிதச்சாயங்களுக்கான புலன்விசாரனை
கொஞ்சம் காரமாய் ஏதாவது இருக்கிறதா
அதோடு அதையும் எடுத்து வையுங்கள்
சொற்களுக்குச் சிறகு முளைத்தன போல
கொஞ்சம் சிரிப்போடு சித்தாத்தங்கள்
பேசலாமெனின்
நாவிலிருந்து வழுக்கி அந்த வார்த்தை தப்பிக்குமாயின்
பேசப்படாத குமைச்சலும் வாந்தியாய் வெளியேறி
வாழ்நிலைத் தத்துவங்களுக்கான புதுக்கோணங்கள் பிடிபடுமாயின்
அதைத் திறவுங்கள
குளிர் தண்ணியோ அல்லது கோலாவோ
இருக்கிறதா?
உடலிற் படிந்த நிழற்சேற்றைக் கழுவிஊற்றலாமெனின்
எங்கள் பகல்களின் பொத்தல்களையும்
இராக்கனவுகளின் விரிசல்களையும் தைக்கும் ஊசி
அறுபடாத நூலிற் கிடைக்கப்பெறுமெனின்
காவிக்கொண்டு பிறந்த எங்களுக்கான
கருணைமனுவும் புனிதச்சாயங்களும்
புலன்விசாரனைக்கு உட்படுமெனின்
அதை ஊற்றுங்கள்
காதலர்களை விபரமாய் மறக்கலாமெனின்
தனிமைப் பிரளயத்திலிருந்து தாவிக் கடக்கலாமெனின்
கூன்விழுந்த இரவுகளை
நொண்டிக் கடந்தகதைச் சொல்லலாமெனின்
யுகத்தோடு சிலநொடி தொடர்பு அறுபடுமாயின்
ஏதோவொரு வளையற்கை கெடுபிடி பெறுமாயின்
காரமானதை அருகில் வையுங்கள்
என் மூக்கின் துவாரங்கள் பழகக்கூடாதென
விஸ்கியோ வொட்காவோ
திரவத்தை ஏன் எனக்கு ஒளித்தீர்கள்?
தெரியும்… தெரியும்
ஜாக்கிரதை என்ற சமிக்ஞை
இனி நான் வர நடக்கும்