Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புத்திசீவிகளின் அறிக்கை கையொப்பத்திற்கு உமா வரதராஜன் மீண்டும் மறுப்பு

‘தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என வெளிவந்த 71 புத்திசீவிகளின் அறிக்கையில் கையொப்பமிடவில்லை என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார். அறிக்கையில் ஒப்பமிட்டதாக கூறுவது அரசியல் பகடையாட்டத்தில் தன்னை சிக்க வைக்கும் கயமைத்தனம் என்றும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

‘தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளவர்கள் குறித்த அறிக்கையில் உமா வரதராஜன் பூரண சம்மதத்துடன் ஒப்பமிட்டார் என்று தெரிவித்துள்ளனர். குறித்த தகவலை எழுத்தாளர் உமாவரதராஜன் முற்றாக மறுத்துள்ளார்.

தற்பொழுது வெளிநாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டுள்ள உமாவரதராஜனை குளோபல் தமிழ் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குறித்த அறிக்கையில் தான் கையப்பமிடவில்லை என்ற தகவலை மீண்டும் உமாவரதராஜன் உறுதிசெய்தார்.

தான் வெளிநாட்டுப் பயணம் ஒன்றில் இருப்பதாகவும் இணையத் தொடர்பற்றிருப்பதாகவும் குறிப்பிட்ட ஈழத்து எழுத்தாளர் உமாவரதராஜன் யாருடைய மின்னஞ்சலையும் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதவேளை தொலைபேசி வழியாகவோ வேறு எந்தத் தொடர்பாடல் ஊடாகவோ குறித்த அறிக்கையில் ஒப்பமிடுவது குறித்து தன்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தான் அந்த அறிக்கையைப் பார்த்ததாகவோ, அதற்க்குப் பதிலளித்த தாகவோ, அல்லது அதில் கையொப்ப மிட்டதாகவோ நிரூபிக்குமாறு அதில் சம்மந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் பகடையாட்டத்தில் என்னைச் சிக்க வைக்கும் இந்த கயமைத் தனத்துக்கெதிரான கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் தெரிவித்தார்.

நன்றி : குளோபல் தமிழ் செய்திகள்

Exit mobile version