கடந்தவருடம் அழகும் பொலிவும் நிறைந்ததல்ல.
புதிய வருடம் உலக மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் தருவதற்கான எந்த அடிப்படையையும் 2013 விட்டுச் செல்லவில்லை.
2014 ஆம் ஆண்டில் அழிக்கப்படுவதற்கான நிலக் கண்ணிகள் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளன என்ற அச்சம் மக்கள் மத்தியில் மறுபடி மறுபடி தோன்றுகின்றது.
உலகம் முழுவதும் நடத்தப்படும் பல்தேசியக் கொள்ளையின் விளைவாக அமைதியாக வாழ்ந்த உழைக்கும் மக்களது ஏழைகளதும் நாளாந்த வாழ்க்கை இன்னொரு முறை 2014 ஆம் ஆண்டில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
மரணப்படுக்கையிலிருக்கும் நவதாராளவாதப் பொருளாதாரம் ஏகபோக நாடுகளில் மக்களைக் கொன்று தின்ன ஆரம்பித்திருக்கிறது. அதன் உலகமயமாக்கல் மூன்றாம் உலக நாடுகளில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது.
உலகத்தின் அனைத்து நகர்வுகளையும் ஈழத் தமிழர் பிரச்சனையை மட்டுமே மையமாக முன்வைத்து , மாபெரும் சக்தியாக உலகமு முழுவது இணைந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து அன்னியமாகும் அரசியல் தொடர்கிறது. 2013 இன் இறுதியில் இலங்கையில் நடத்தி முடிக்கப்பட்ட பொதுநலவாய நாடுகளின் மாநாடு அழிவின் விழிம்பிலிருக்கும் இலங்கையை நிரந்தர அவலத்திற்கு உள்ளாக்கும் அடிப்படைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களை முன்வைத்து எதிரெதிர் அழிவு அரசியல் நடத்தப்படுகின்றது.
இனப்படுகொலை நடத்திய இலங்கை அதிகாரம் ஒரு புறத்திலும், இனப்படுகொலை நடத்த வழியேற்படுத்திய தமிழர்களின் தலைமைகள் மறுபுறத்திலும் மக்களின் துயரங்களை மூலதனமாக்கிக் கொள்கின்றன.
மறுபக்கத்தில் உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கையைச் சிறுகச் சிறுக சூறையாடிய அரசுகள் இன்று மக்கள் மீது தமது பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளன. வெறிகொண்ட கொலைப்படைகளும், தனியார் இராணுவப்படைகளும் அரசுகளின் அங்கீகாரத்தோடு தோற்றுவிக்கப்படுகின்றன. உலகம் பாதுகாப்பற்றது என பெஉம்பகுதி மக்கள் உணர்ந்துகொள்கிறார்கள்.
புலம் பெயர் நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் பூனைகளைப் போல தமிழர்கள் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த எந்த சிந்தனையுமற்றவர்களகக் காணப்படுகின்றனர். பல்தேசியக் வியாபாரக் கொள்ளைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பலியாகப் போகும் தமது சந்ததி குறித்து எந்த அறிவும் அற்ற புலம் பெயர் சமூகங்கள் தாம் வாழும் நாட்டு மக்களின் பொதுவான முற்போக்கு பகுதிகளோடு கூட இணைந்துகொள்வதில்லை, தமக்கு எதிரான அரச அதிகாரிகளின் விசுவாசிகளாக அறிவற்ற மூடர்களாக வளர்க்கப்பட்டுள்ளனர்.
பழைமைவாதப் பிற்போக்குத் தனத்தில் ஊறிக்கொழுத்த இவர்களின் சிந்தனைக்கு தலைமைதாங்கும் தமிழ் இனவாதிகள், ஈழத் தமிழர் அவலங்களை வர்த்தக மயப்படுத்துகிறார்கள். இதன் மறுவிளைவாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்கள் மட்டுமன்றி இலங்கை முழுவது சூறையாடப்படுவதற்கான வசதிகளை பல்தேசிய வியாபாரிகளுக்கும் ஒடுக்கும் அரசுகளும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
கடந்துபோன வருடங்கள் முழுவதும் இனியொருவின் எழுத்தாளர்கள் மற்றும் ஆரவலர்கள்
இவற்றிற்கு எதிரான தமது எழுத்துப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். வாசகர்கள், புதிய அறிவுசார்ந்த வாசகர்வட்டத்தை விரிவு படுத்தியுள்ள்னர். இனொயொரு தவிர்ந்த பல அரசியல் இயக்கங்கள் கூட இருளில் சிறிய ஒளிபோன்று நம்பிக்கை தருகின்றன. 2014 இல் இந்த நடைமுறை புதிய உத்வேகம் பெறும் என்று நம்பிக்கை கொள்வோம். இவர்கள் அனைவருக்கும் இனியொருவின் புதிய ஐரோப்பியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.