03.03.2009.
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியில் உணவு இல்லாத காரணத்தால் 13 பொது மக்கள் மரணமடைந்ததாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜா முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
போதிய உணவில்லாத காரணத்தினால் அங்குள்ள மக்கள் உண்டு பழக்கமில்லாத இலைவகைகளை சமைத்து உண்டதாகவும், அதனால் ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் வசம் எஞ்சியுள்ள கடைசி நகரமாகிய புதுக்குடியிருப்பு நகரின் சந்திப்பகுதியை இலங்கை இராணுவம் இன்று காலை கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது.
இதனிடையில், ஆனையிறவுக்கு கிழக்கில் அமைந்துள்ள, வண்ணான்குளம் என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலையாளி ஒருவர் குண்டைவெடிக்கச் செய்து மரணமடைந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
BBC