Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதுடில்லி பெண் வல்லுறவு கொலை தொடர்பான ஐதேக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை : ஜனநாயக மக்கள் முன்னணி

புதுடில்லி பெண் வல்லுறவு கொலை தொடர்பான ஐதேக ஆர்ப்பாட்டத்தில் நாம் கலந்துகொள்ளவில்லை
ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா

புது டில்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்து மரணமான இந்திய பெண் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ். பாஸ்கரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

புதுடில்லி பெண்ணின் பாலியல் வல்லுறவு கொலை தொடர்பாக, ஐதேகவின் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர்களின் பிரதான பங்குபற்றலில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெறப்பட்ட கையெழுத்து மனு இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

மாநகரசபை முன்றலில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சி தலைவர் மனோ கணேசன் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் நமது கட்சி உறுப்பினர்கள் எவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வில்லை.

புதுடில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம் அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆனால், புதுடில்லி பெண் தொடர்பில் இந்திய தூதுவரிடம் மனு கையளிக்கும் நிலைமையும், தகைமையும் நமது நாட்டில் நிலவுவதாக நாம் நம்பவில்லை. இந்த நாட்டில் இன்று தமிழ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட பல மடங்கு பாரதூரமானதாகும் என்பது எமது நிலைப்பாடாகும். குறிப்பாக இன்று வன்னியிலே நிர்க்கதியாயுள்ள தமிழ் பெண்கள் பெரும் உடல், உள துன்பங்களை சந்திக்கின்றனர். நடந்து முடிந்த போரின் போதும், போர் முடிந்து அகதிமுகாம்களில் அடைப்பட்டிருந்தபோதும் நமது பெண்கள் மிகபெரும் அவலங்களை சந்திக்கின்றனர். இந்த அவலங்கள் இன்றும் தொடர்கின்றன.

எனவே நமது பெண்கள் அவல நிலையில் வாழும் பொழுது, அதை அறியாதது போல் புதுடில்லி பெண் தொடர்பாக நாம் செயல்பட முடியாது. நம் நாட்டு தமிழ் பெண்களின் அவல நிலையை ஐதேக பெண்கள் சங்கத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஐதேகவினருக்கு நாம் எடுத்து கூறியுள்ளோம்.

Exit mobile version