தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது.
ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.
பிரதிநிதித்துவ அரசியலுக்கு அப்பால் புதிதாக, ஆக்கபூர்வமான, வினைத்திறனான சிந்தனைகளை முன்கொண்டுவந்து தமிழ் மக்களை எவ்வாறு ஒன்றுபடுத்துவது என்பது குறித்து சிந்திக்காத அரசியல் தலைமைத்துவமே தற்போது இருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன்.
மாற்றம் என்ற இலத்திரனியல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே மேற்குறித்த கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்