இசைப்ரியா தொடர்பாக புதிய காணொளி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாலும் இவர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலைமையில் இறந்து கிடக்க காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் உயிருடன் படையினரால் பிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுவதான காட்சியை புதிய காணொளி காட்டுகிறது.
இந்த காணொளி ஆதாரம் உலகை உலுக்கியுள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கான பதில்களை போரை முன்னின்று நடத்திய தரப்பும், போரை நடத்துவதற்கு ஆதரவு அளித்த தரப்பினரும், இன்று அரசிற்கு உள்ளே இருந்தபடி அரசை தாங்கி பிடித்து நிற்கின்ற தரப்பினரும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும், உலக மனித உரிமை சமூகத்துக்கும் பொறுப்புடன் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
முன்னாள் படைத்தளபதியும், இன்றைய எதிரணி அரசியல் கட்சி தலைவருமான சரத் பொன்சேகா, இது தொடர்பாக அரசு ஆதாரபூர்வமாக பதிலளிக்க கடமைபட்டுள்ளது என கூறியுள்ளார். போரின் இறுதி கட்டத்தில் இரானுவத்திடம் சரணடந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை பரிசீலிக்க வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.
இது பற்றிய பொறுப்பு கூறல் இலங்கை அரசாங்கத்தின் பிரதான கடப்பாடு என்பதை ஐநா சபை ஏற்கனவே எடுத்து கூறிவிட்டது. இந்நிலையில் ஆதாரங்களுடன் வரும் போர்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது கட்டாயமானதாகும். உலகத்தரம் வாய்ந்த ஒரு ஊடக நிறுவனத்தால், வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய காணொளி காட்சிகள், இந்நாட்டிலும், உலகம் முழுக்கவும் வாழும் தமிழர்களுக்கும், பெண்ணிய போராளிகளுக்கும் மிகவும் உணர்வுபூர்வமானதாகும். ஆனால், இது உணர்வுபூர்வமானது மாத்திரம் அல்ல, சர்வதேச சட்டரீதியானதாகும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சி தலைவன் என்ற முறையிலும், மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றவன் என்ற முறையிலும், இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச சட்டத்தை ஞாபக ப்படுத்துகிறேன்.