புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின்
5 வது அனைத்திலங்கை மாநாட்டின்
3வது நிறைபேரவைக் கூட்டம்
27,28-07-2013
அரசியல் அறிக்கை
தோழர்களே!
நாம் புதிய–ஜனநாயக மாக்சிச–லெனினிசக் கட்சியின் 5வது அனைத்திலங்கை மாநாட்டின் மூன்றாவது நிறைபேரவைக் கூட்டத்தில் கூடியிருக்கின்றோம். நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டுத் தளங்களில் கட்சியின் மாக்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை அடிப்படையிலான கொள்கை நிலைப்பாடு பற்றியும் அதன் நடைமுறை முன்னெடுப்புகள் பற்றியும் 2010 யூனில் நடைபெற்ற கட்சியின் 5வது அனைத்திலங்கை மாநாடு தெளிவான கொள்கையை முன்வைத்திருந்தது. அதன் பின் 2011 யூனில் இடம் பெற்ற முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் உடனடியானதும் நீண்ட காலத்திற்குமான வேலைத்திட்டத்தையும் முன்வைத்திருந்தது. அதேபோன்று 2012 யூனில் நடைபெற்ற இரண்டாவது நிறைபேரவைக் கூட்டம் ஷஷகட்சியைப் புரட்சிகர அமைப்பாகக் கட்டியெழுப்புவோம். வெகுஐன வேலைகளை முன்னெடுப்போம்||என்பதனை தொனிப் பொருளாக முன்வைத்து நடைபெற்றது. அவற்றிற்கான அறிக்கைகள்இ தீர்மானங்கள் வேலைத்திட்டங்கள் இருந்து வருகின்றன. ஆதலால் அவற்றை மீளவும் ஒப்புவித்து விளக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய குழு நம்புகிறது. எனவே மேற் கூறியவற்றின் அடிப்படையில் நாட்டின் அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டுத் தளங்களில் இடம்பெற்று வந்துள்ள போக்குகளையும் அவற்றின் மீதான கண்ணோட்டங்களையும் இன்றைய நிறைபேரவைக் கூட்டம் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படுவதையே கடமையாகக் கொள்கிறது. அதற்கான சுருக்க வடிவிலான அரசியல் அறிக்கை இங்கு முன் வைக்கப்படுகிறது.
தோழர்களே,
நாட்டின் இன்றைய அரசியல் நிலையானது நிறைவேற்று அதிகாரத்தின் மிக மோசமான ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கின் தன்மைகளை மிகத் தெளிவாகவும் அப்பட்டமாகவும் வெளிப்படுத்தி நிற்கிறது. யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியின் தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடகாலத்தில் ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சியானது முழுமையான ஃபாசிசத்தை நோக்கி வழி நடந்து வந்திருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனநாயக மனித உரிமைகளை மறுத்து நிற்பதிலும் தொழிலாளர்கள் ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகளை நிராகரித்து அவர்களது தொழிற்சங்கப் போராட்ட முயற்சிகளை நசுக்குவதிலும் முன்னின்று வருகிறது. அரசியலமைப்புக்கான பதினெட்டாவது திருத்தத்தைக் கொண்டு வந்ததுடன் அதன் அதிகார ஆணவத்துடன் ஜனநாயக விரோத மக்கள் விரோத செயற்பாடுகளை ராஜபக்ஷ குடும்ப ஆட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவி பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையேயாகும். மாகாணசபைகளுக்குரிய குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூடப் பிடுங்கி எடுத்துக் கொள்ளும் வகையிலேயே திவிநெகும சட்டமூலம் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் துச்சமாக மதித்து நிறைவேற்றப்பட்டது. அதேவேளை தமக்கு வளைந்து கொடுக்காத 43வது பிரதம நீதியரசரைப் பழிவாங்கும் விதமாக அவர் மீது குற்றப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றி அவரை அகற்றிக் கொண்டனர். முதலாளித்துவ சட்ட ஆட்சி, அதன் கீழான நீதித்துறை என்பனவற்றை அவற்றின் சம்மந்தமுடையோரின் கடும் எதிர்ப்புகள் மத்தியிலும் தாம் நினைத்தவாறு கையாண்டு நியமனங்களை வழங்கிக் கொண்டனர். மேற்குறித்த சர்வாதிகாரப் போக்கிலேயே அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தை நீர்த்துப் போகவைப்பதற்கும் அல்லது முற்றாகவே அகற்றுவதற்கும் ராஜபக்ஷவின் சகோதரர் ஆட்சி முயன்று நிற்கிறது. இது தமிழ்த் தேசிய இனத்திற்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் எதிரான பேரினவாத ஒடுக்கு முறைச் செயற்பாடாகவே காணப்படுகிறது. பதின்மூன்றாவது திருத்தமும் அதன் கீழான மாகாண சபை முறைமையும் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக அமைய முடியாது. அதில் அதிகாரப் பகிர்வு எதுவும் இல்லை. ஆனால் இலங்கையின் அரசியல் அமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கெனச் சேர்க்கப்பட்ட ஒரே ஒரு பெயரளவிலான விடயம் என்ற நிலையிலாயினும் அது அரசியலமைப்பில் இருப்பது தேசிய இனப்பிரச்சினையைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே அரசியலமைப்பிலிருந்து அகற்றுவது அல்லது நீர்த்துப்போகச் செய்வதென்ற முடிவானது அப்பட்டமான ஜனநாயக விரோத பேரினவாத ஒடுக்குமுறையின் சர்வாதிகார முயற்சியேயாகும்.
நாட்டில் யுத்தம் மும்முரமாக இடம்பெற்று வந்த இறுதிக்கட்ட மாதங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி யுத்தத்திற்குக் காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போம் என்பதேயாகும். ஆனால் படிப்படியாக அது பற்றிய கதைகள் யுத்த வெற்றி விழாக்களுடன் மறைந்து கொண்டது. கடந்த ஒரு வருடத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தை இல்லாமல் செய்ய அல்லது திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்யவும் அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு எதிராக ஐ.தே.கட்சி, ஜே.வி.பி., த.தே.கூ ஆகிய பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் தத்தமது நிலையில் எதிர்ப்புக்குரலை முன்வைத்து வருகின்றன. அதேவேளை அரசாங்கத்திற்குள் இருக்கும் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் என்பன தமது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியும் வருகின்றன. இவர்களுடன் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றது. ஈ.பி.டி.பியும் மலையகத்தின் இ.தொ.க. வும் ஏனையவர்களும் தெளிவான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க முடியாது விக்கிய நிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அரசாங்க அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கையும், விமல் வீரவன்சாவும் உச்ச நிலை எதிர்ப்பை பதின்மூன்றாவது திருத்தத்திற்குக் காட்டி வருகின்றனர். இவர்களது வரிசையில் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளான பொதுபலசேனா, சிங்கள ராவய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றன களமிறங்கி நிற்கின்றன. பௌத்த மத அடிப்படைவாதத்தையும் சிங்கள இனத் தொன்மைத்துவத்தையும் நவபாசிசப் போக்கில் உயர்த்தி நிற்கின்றனர். தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு எதிரான இவர்களது வெறித்தனமான துவேஷங்களும் எதிர்ப்புகளும் செயற்பாடுகளும் திட்டமிட்டவாறே முன்னெடுக்கப்படுகின்றன. இவர்களுக்குப் பின்னால் ராஜபக்ஷ சகோதரர்களது பேரினவாத பாசிச ஒடுக்குமுறைக் கரங்கள் இருந்து வருவது தெரிகிறது. அத்துடன் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் இவற்றின் பின்னால் மறைவில் இருந்தும் வருவதாக நம்பப்படுகிறது.
மற்றொருபுறத்தில் நாட்டை ராணுவமயப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ராணுவமும் ஏனைய ஆயுதப் படைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ராணுவம் சகல வழிகளிலும் நவீன மயப்படுத்தி பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் ராணுவத் தலைமையகங்களில் வழங்கப்படுகின்றன. பாடசாலை அதிபர்களுக்குப் பயிற்சியும் ராணுவப் பட்டங்களும் கொடுக்கப்படுகின்றன. இவை மட்டுமன்றி அரசாங்க உயர் பதவிகளில் ஓய்வுபெற்ற ஆயுதப் படைகளின் அதிகாரிகளே இருந்து வருவதுடன் வெளிநாட்டு ராஜதந்திர சேவைகளிலும் அவர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்கள், சில அரசாங்க அதிபர்கள் என்போர் முன்னாள் ஆயுதப்படைகளின் அதிகாரிகளேயாவர். வருடாவருடம் ஆயுதப்படைகளுக்கு ஒதுக்கப்படும் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடானது யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் பின்பும் அதிக தொகையாக முதலிடத்திலேயே இருந்து வருகிறது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் பாரிய ராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப்பட்டு விமான கடற்படைத் தளங்கள் நவீனப்படுத்தப்பட்டு விஸ்தரிக்கப்படுகின்றன.
இவற்றுக்கும் மேலாக இன்றைய ராஜபக்ஷ சகோதர குடும்ப ஆட்சியானது ஜனநாயக மறுப்பிற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் பெயர் பெற்று விளங்கும் ஒரு ஆட்சியாகக் காணப்படுகிறது. கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இவற்றை ஆயுதப்படைகளும் அரசாங்க ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் செய்து வருகின்றன. இவற்றை அரசாங்கம் மூடி மறைத்து வருவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
ஊழல், லஞ்சம், மோசடி இன்றைய ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கின்றன. எங்கும் எதிலும் தரகுப் பணம் முதன்மை பெற்று நிற்கின்றன. அரசாங்க அதி உயர் மட்டத்தினர் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் ஊழல்களில் மிதந்து வருகின்றனர். பொதுநிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் (ஊழுPநு) வெளியிடும் அறிக்கைகள் அரசாங்க மட்ட பொது நிறுவனங்களின் இடம்பெற்றுள்ள ஊழல்களை அம்பலப்படுத்துகின்றன. லஞ்சம் இன்று பகிரங்கமானதும் அது இன்றி எதுவும் செய்ய இயலாது என்ற நிலையுமே காணப்படுகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருப்பதற்காக பல கட்சிகளையும் தன்னுடன் வைத்திருக்கிறது. வலதுசாரி, இடதுசாரி, மதவாத, பேரினவாத சக்திகளின் கூட்டுக் கலவையாகவே அரசாங்கம் காணப்படுகிறது. அதனால் அறுபத்தைந்து அமைச்சரவை அந்தஸ்துக் கொண்ட அமைச்சர்களும் நாற்பது வரையான பிரதி அமைச்சர்களும் இருந்து வருகின்றனர். அத்துடன் பெரும் தொகையான ஜனாதிபதி ஆலோசகர்கள் இருந்து வருவதுடன், இவர்கள் எல்லோரும் நாட்டு மக்களின் பணத்தில் பெருந் தொகையான சம்பளமும் சலுகைகளும் சொகுசு வாகனங்களும் பெற்று ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக அமைச்சர்கள் முதல் உயர் அரசாங்க அதிகாரிகள் வரை காணப்படுகின்றனர். இதில் மற்றொரு முரண்நகை யாதெனில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அதியுயர் மட்டங்களில் இருந்து சரணடைந்தவர்கள் எனப்படும் சிலர் அமைச்சுப் பதவிகளும் ஏனைய பதவிகளும் பெற்று சகல பாதுகாப்புகளுடன் அரசாங்க விருந்தினர்களாக இருந்து சகல சலுகைகள் சுகபோகங்கள் அனுபவித்து வருவதுதான். கொள்கை கோட்பாடு இலட்சியம் இன்றியும் மக்களுக்கான விடுதலை பற்றிய தெளிவும் அர்ப்பணிப்பு இல்லாத எந்தவொரு வீரதீர இயக்கமும் அதன் தலைமையும் சென்றடையும் இடத்தையே மேற்படி நபர்கள் உதாரணப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான மகிந்த சிந்தனை அரசாங்கம் இந்நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரசாங்க-தனியார் துறை ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவோ அவர்களுக்கு நன்மைகள் செய்து வரும் ஒரு அரசாங்கமாகவோ இல்லை என்பது அப்பட்டமாக இருந்து வரும் உண்மையாகும். நிறைவேற்று அதிகாரத்தின் உச்சநிலை தனிநபர் சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தி வரும் ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியானது பாசிசத்தின் வழிமுறைகளினூடே வழி நடந்து செல்கிறது. இன்றும் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசியல் கைதிகள் பல வருடங்களாகியும் விடுதலை செய்யப்படவில்லை. காணாமல் போனோர் பற்றிய கதையே எடுக்கப்படவில்லை. ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை என்ற பெயரில் ஊடக சுதந்திரம் கடுமையாக நசுக்கப்படுகிறது. ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்கள், காணாமல் போதல் தொடர்கிறது. இதன் காரணங்களால் பலர் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று ஊடகங்கள் சுய தணிக்கையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய அடக்கு முறைகளின் கீழேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தொழிலாளர்கள், ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் மறுத்து நிராகரிக்கப்படுகின்றன. சகல துறைகளிலும் சம்பளம் போதாமையாலும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமலும் அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கிளம்பி வருவதைக் காண முடிகிறது. அதற்கு அரசாங்கம் கொடுக்கும் பதில் அடக்குமுறையாக மட்டுமே இருந்து வருகிறது. பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்டவர்களும் இணைந்து நிற்கும் இன்றைய அரசாங்கம் மிக மோசமான தொழிலாளர் விரோத அரசாங்கமாகச் செயல்பட்டு வருகின்ற போக்கையே காண முடிகிறது. இவர்கள் மட்டுமன்றி விவசாயிகள், மீனவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் விலை உயர்வுகளால் கட்டண அதிகரிப்புகளால் மிக மோசமான வாழ்க்கை நிலைமைகள் ஊடாக வாழ்க்கைத்தர வீழ்ச்சிகளைக் கண்டு வருகிறார்கள். அவ்வாறே பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் வரை மோசமான கல்வித்துறைக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களாகி நிற்பதையும் காண முடிகிறது. அவற்றை எதிர்த்து நீதி நியாயம் கேட்டால் மாணவர்கள் மீது மோசமான பொலிஸ் ராணுவ அடக்குமுறை ஏவிவிடப்படுவது சாதாரண விடயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சியானது இந்நாட்டின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் மீது தாங்கமுடியாத சுமைகளை ஏற்றிவரும் ஒரு தரகு முதலாளித்துவ அடக்குமுறை ஆட்சியாகவே தொடர்கிறது. தமது சுயரூபத்தை மறைக்கவும் பெரும்பான்மை சிங்கள மக்களைத் திசை திரும்பி அவர்களிடையே வாக்கு வங்கிச்செல்வாக்குப் பெறுவதற்கும் தம்மைப் பௌத்த மதத்தின் காவலர்கள் போன்று இன்றைய ஆட்சியினர் நடந்து கொள்கின்றனர். இது இவர்கள் வாக்கு வங்கிக்கான வழியாக மட்டுமன்றி இந்நாட்டைத் தனியே சிங்கள பௌத்த நாடாக்கும் பேரினவாத சிந்தனையின் பாற்பட்டதுமாகும்.
இத்தகைய அடிப்படையிலேயே நாட்டின் தேசிய இனப்பிரச்சினை நோக்கப்படுகிறது. இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வர எத்தனிக்கும் எந்தவொரு பாராளுன்றக் கட்சியும் சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டை எடுக்காமல் தமக்கான வாக்குவங்கி எதனையும் கொண்டிருக்க முடியாது என்ற எழுதா விதி இருந்து வருகிறது. இது தென்னிலங்கையின் அனைத்து சிங்கள பௌத்த அரசியல் கட்சிகளிடையேயும் படிந்து இறுகிப் போன அரசியல் நிலைப்பாடாகும். ஜே.வி.பி. இதற்கு விதிவிலக்கல்ல. அதேவேளை ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த சோஷலிச முன்னிலைக் கட்சியும் இந்த விதிவிலக்கிலிருந்து விடுபட முடியாது தடுமாறி நிற்கிறது. இவர்கள் எல்லோருமே சுயநிர்ணய உரிமை என்பதனைப் பிரிவினையாகவே அர்த்தப்படுத்திய நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்காது வௌ;வேறு நியாயங்கள் கூறி அதன் ஆழத்தைப் புரியாது சொற்சிலம்பம் ஆடி வருகின்றார். ஒரு நேர்மையான இடதுசாரிக் கட்சியோ தனிநபரோ நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினையில் முன்வைக்கும் கொள்கையே அவர்களது இடதுசாரித்தனத்திற்குரிய அளவுகோலாகிறது.
இந்நிலை காரணமாகவே கடந்த அறுபத்தைந்து வருடகால பாராளுமன்ற – நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமைகளின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால் தேசிய இனப்பிரச்சினையானது யுத்தமாக்கப்பட்டு சுமார் மூன்றரை லட்சம் வடக்கு கிழக்கு மக்களின் உயிர்கள் பலி கொள்ளப்பட்டன. இதில் சிங்கள முஸ்லிம், மலையக மக்களும் கொல்லப்பட்டனர். இன்றும் கூட ராஜபக்ஷ குடும்ப ஆட்சியானது தேசிய இனப்பிரச்சினை என்பதனை உச்சரிப்பதற்குக் கூடத் தயாரில்லாத நிலையிலேயே இருந்து வருகிறது. அதன் ஆழத்தையும் அபாயத்தையும் புரிந்து கொள்ள மறுத்து யுத்த வெற்றி தந்த மமதையால் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறை மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருகிறது. நாட்டின் இறைமைக்கும் சுதந்திரம் சுயாதிபத்தியத்திற்கும் ஆபத்தைக் கொண்டு வரக் கூடிய நிலையில் இருந்து வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதை மகிந்த சிந்தனை ஆட்சி எனப்படும் ராஜபக்ஷ சகோதரர் ஆட்சியானது மறுத்து வருவது அபாயமான ஒரு நிலையேயாகும். இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் தீர்வுக்கான கொள்கையும் கோரிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஐக்கியப்பட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு முறையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக முடியும் என்பதை எமது கட்சி தெளிவான கொள்கையாகவும் கோரிக்கையாகவும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிட வேண்டியதாகும். அதே வேளை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியிலான பிற்போக்குத் தலைமைகள் பேரினவாத ஒடுக்குமுறை ஆட்சிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றது. தமிழ்த் தேசியம் பேசும் தமிழர் தரப்பு ஆதிக்க அரசியல் தலைமைக்கள் பேரின வாத எதிர்ப்பு என்ற பேர்வையில் தமது பழமைவாதக் குறுந்;தேசியவாதத்தைப் பற்றி நிற்கின்றன இத்தகைய நிலைப்பாடு கடந்த காலம் முதல் இன்றுவரை முன்னெடுத்து வருரப்படுகிறது. இதனை வரலாறு நிருபித்து வந்துள்ளது. ஆனால் தமிழ்த் தலைமைகள் தமது மேட்டுக்குடி உயர்வர்க நிலைப்பாட்டடை முன்னேடுப்பதில் இன்றும் முன்னின்று வருகின்றன.
அதேவேளை வடக்குக் கிழக்கைத் தொடர்ந்து ராணுவப் பிடிக்குள் வைத்து வருவதன் மூலம் தமது பேரினவாத ஒடுக்குமுறைத் திட்டங்களை ராஜபக்ஷ ஆட்சியினர் நிறைவேற்றி வருகின்றனர். ராணுவத்தை அங்கு சகல மாவட்டங்களிலும் நிரந்தரமாக வைத்திருப்பதற்கான திட்டத்தின் படியே மக்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பலவந்தமாகப் பிடித்து வருகின்றனர். பல அளவுகளில் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு மக்களின் நிலங்கள் வீடுகள் தொழில் செய்யும் இடங்கள் விவசாய நிலங்கள், கடலோரங்கள் ஆகியன பறித்து வரும் போக்கு அதிகரித்து வருகிறது. வடக்கே வலி- வடக்கில் பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை, வீமன்காமம், குரும்பசிட்டி, வசாவிளான் போன்ற பகுதிகளில் 24 கிராமசேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. 1983ல் இருந்து படிப்படியாக வலிவடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த மக்கள் 1990ல் முற்றாகவே வெளியேற்றப்பட்டு அகதிவாழ்விற்குள் தள்ளப்பட்டனர். இப் பிரதேசத்தின் 7 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 6400 ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது. இதனை இடம்பெயர்ந்த மக்களும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அதேநேரம் சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தின் சின்னமாக வடக்குக் கிழக்கில் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவிப் பலப்படுத்தி வருகின்றனர். அத்துடன் இன்றும் வடக்கில் ராணுவ நிர்வாகமே சகலவற்றையும் தீர்மானிக்கும் நிலையில் இருந்து வருகிறது. கிழக்கில் முன்னாள் ஆயுதப்படை அதிகாரியான ஆளுனரே சகலவற்றையும் தீர்மானிக்கும் அதிகாரியாக இருந்து வருகிறார். வடக்குக் கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் அல்ல என்பதை மறுதலித்து மூவின மக்களது பிரதேசம் எனக் கூறிப் பேரினவாதத் திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கின் சம்பூர் கிராமம் அரசால் பறிக்கப்பட்டு 540 ஏக்கர் இந்திய அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கும் 818 ஏக்கர் பாரிய கைத்தொழில் வலயத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பூர் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை சம்பூரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான உள்ளார்ந்த திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
தமிழ் மக்கள் போன்று முஸ்லீம் மக்களும் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால் அதன் தலைவர்கள் என்போரது சலுகை பெறும் அரசியல் நிலைப்பாட்டால் அவ் ஒடுக்குமுறைகள் மறைக்கப்படுகின்றன. அவற்றையும் மீறிய நிலையில் எதிர்ப்புகள் வெளிவருகின்றன. பொதுபல சேனா என்ற மத அடிப்படை வாத அமைப்பு அரசின் பின்புலத்தோடு முஸ்லீம் மக்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இதுவரை 25 வரையான பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களும் இழி செயல்களும் செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக அரசாங்கம் எதுவுமே செய்யாது மௌனமாக இருந்து வருகிறது. அதேவேளை முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவற்றைக் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றன. ஆனால் முஸ்லீம் மக்கள் மத்தியில் இன்றைய பேரினவாத ஆட்சிக்கு எதிரான அதிருப்திகளும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன.
அதேபோன்று மலையகத் தமிழ் மக்கள் வர்க்க இன அடிப்படைகளில் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பது நாளாந்தம் நிதர்சனமாகி வருகின்றது. அண்மையில் தீர்மானிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்த சம்பள உயர்வு என்பது திட்டமிட்டவாறு குறைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வாராந்த வேலை நாட் குறைப்பின் மூலம் அவர்களது சம்பளம் மேலும் குறைக்கப்படுகிறது. அதனால் பலர் வேலை தேடி வெளியிடங்களுக்கு அலைந்து அங்கெல்லாம் குறைவான சம்பளத்துடன் அவ்வப்போதான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தற்போது அரசாங்கம் மேற்கொள்ள முற்பட்டுள்ள 37000 ஏக்கர் தரிசு நிலக் காணிப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்கள் – இளைஞர்கள் புறம்தள்ளப்படும் நிலையே காணப்படுகிறது. இவற்றுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. அதேவேளை ஏற்கனவே மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் யாவும் தொடர்ந்தும் அதே நிலையிலேயே இருந்து வருகின்றன. மலையகத் தலைமைகள் என்போர் பாராளுமன்ற அரசியலிலும் தொழிற்சங்க ஏமாற்றுகளிலும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகள் பெற்று நிற்பதன் ஊடாகத் தமக்கும் தம்மவர்களுக்கும் சலுகைகள் பதவிகள் பெற்றுக் கொள்ளும் போக்கு முன்நிலை வகித்து வருவதைக் காண முடிகிறது. எனவே மலையக மக்கள் வர்க்க சுரண்டலுக்கும் இன ஒடுக்குமுறைக்கும் முகம் கொடுத்து வரும் போக்கிலும் அவர்களது பொருளாதார வாழ்வுரிமைக் கோரிக்கைகளும் தேசிய இன உரிமைகளும் மேலும் வற்புறுத்தப்பட வேண்டிய புதிய சூழல் உருவாகி வருகிறது.
தரகு முதலாளித்துவத்தை மையப்படுத்திய பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையும் ஊழல் மிக்கதுமான இன்றைய ஆட்சியானது வர்க்க இன அடிப்படைகளில் ஏகப் பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக உழைக்கும் மக்களை ஒடுக்கி நிற்கும் ஒரு பாசிச ஆட்சியாகவே தொடருகின்றது. தமது ஆட்சியைத் தொடர்வதற்கு அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய, இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளோடும் சீனா, பாகிஸ்தான், ரஷ;யா, ஈரான் போன்ற நாடுகளோடும் வௌ;வேறு முகங்களைக் காட்டியவாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தோழர்களே!
இத்தகைய அரசியல் நிலைப்பாட்டின் ஊடாகவே இன்றைய ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சியானது நாட்டின் பொருளாதாரத்தை நவகொலனியத்தின் தரகு முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்படும் நவதாராள பொருளாதாரமாக ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் ஊடே முன்னெடுத்து வருகின்றது. இது 1977ல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் தொடக்கி வைத்த பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும். இன்றுவரையான அப்பொருளாதாரக் கொள்கையின் நீட்சியானது தாராளமயம், தனியார்மயம், உலகமயமாதல் என்பனவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போக்கில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் உற்பத்திப் பொருளாதாரம் என்பது அழிக்கப்பட்டு நவதாராள நுகர்வுப் பொருளாதாரம் வலுவாக்கப்பட்ட நிலையே காணப்படுகிறது. நாட்டு மக்களின் தேவைக்கான உணவு வகைகளின் உற்பத்திகள் கைவிடப்பட்டு அரிசி முதல் அத்தியாவசிய உணவுப் பொருள்கள், உப உணவுப் பொருட்கள் யாவும் இறக்குமதியாகும் சீரழிந்த நிலையே காணப்படுகிறது. இதனால் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரிசி முதல் உப உணவு வகைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு தன்னிறைவு நோக்கி நகர ஆரம்பித்த நமது நாட்டு விவசாயம் இன்று தாராள இறக்குமதிகளால் நாசமடைந்து காணப்படுகிறது. அதேவேளை இறக்குமதியாக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. இலங்கை ஒரு விவசாய நாடு என்ற பெயர் பெற்று விளங்கிய காலம் மறைந்து அந்நிய இறக்குமதிகளின் சந்தையாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக இலங்கையைச் சிங்கப்பூராக்குவேன் என்ற ஜே.ஆரின் கனவை ராஜபக்ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சியானது வேகமாக நனவாக்கி வருகிறது.
இத்தகைய நவதாராள இறக்குமதி நுகர்வுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே உட்கட்டமைப்புசார் அபிவிருத்தி எனப்படுவது முன்னெடுக்கப்படுகிறது. இவ்அபிவிருத்தியானது வீதிகள், அதிவேகவீதிகள், புதிய துறைமுகம், துறைமுக விஸ்தரிப்புக்கள், விமான நிலையங்கள், நகர கட்டிடப் புனரமைப்புகள், நகர அழகுபடுத்தல்கள், நவீன கட்டிட வசதிகள், உயர் உல்லாசவிடுதிகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இவ் உட்கட்டமைப்புசார் அபிவிருத்தி என்பது இன்றைய நவதாராள ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கையின் விரிவாக்கத்திற்கானதேயாகும். நூறு வருடங்களுக்கு முன்பு கொலனியவாதிகள் தமது சுரண்டல் தேவைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஒவ்வொன்றையும் செய்தனர். இப்போது நவகொலனியவாதிகளின் சுரண்டல் தேவைகளுக்காக நம் நாட்டின் ஆட்சியாளர்களினால் உட்கட்டமைப்புசார் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இவை மக்களுக்கு சார்பானவைகள் அல்ல. முற்றிலும் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கானவைகளேயாகும். தங்கு தடையற்ற இறக்குமதிகளும் அவை விரைவாக நாட்டின் நாலாதிசைகளுக்கும் எடுத்துச் செல்லவும் உல்லாசப் பிரயாணிகளின் வருகைக்கும் உல்லாச அனுபவிப்புகள் என்பனவற்றுக்காகவுமே இவ் அபிவிருத்தி எனப்படுவது பலநூறு கோடி ரூபாய்களை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன, இந்திய வங்கிகள் மூலம் கடன்பெற்று செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் நிலங்களும் ஏனைய வளங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஐந்து ஏழு நட்சத்திரக் ஹோட்டல்கள் மட்டுமன்றி கஸினோ சூதாட்ட மையங்களும் தலைநகரில் கட்டப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இவை உல்லாசப் பிரயாணகளின் வருகைக்கானவைகளேயாகும். குறுக்கு வழிகள் மூலம் பணவருவாயை நாடியே ராஜபக்ஷக்களின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
அதேபோன்று வர்த்தக மையங்களுக்குரிய பாரிய கட்டிடங்களுக்கான முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. தலைநகரில் உள்ள சாதாரண மக்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்டு அவ்விடங்கள் பெருவணிக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாhன நிலங்களும் வளங்களும் அந்நியருக்கு தாரை வார்க்கப்படும்போது ஆட்சியின் அதிஉயர் மட்டத்திலிருந்து அடுத்தடுத்த மட்டங்களில் இருப்போர் வரை தாராளமயமாகவே தரகுப் பணம், சந்தோசப் பணம் பெற்றுக்கொள்கின்ற நடைமுறை மறைவாகப் பின்பற்றப்படுகிறது. இவ்விடத்தில் ஊழல்கள் பல்வேறு விதங்களிலும் இடம்பெறுகின்றன. இவ் ஊழல் லஞ்சம் மோசடியாகவும் மேலிருந்தே கீழ் நோக்கி வருகின்றன. ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்பது இன்று நடைமுறையாகி வருகின்றது. எவ்வழியிலும் பணம் திரட்டிக் கொண்டால் போதும் என்ற முதலாளித்துவப் பேராசை நடைமுறை மேலோங்கி நிற்கிறது.
நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிற்கான தைத்த ஆடைகள் ஏற்றுமதியே முதன்மை பெற்றுள்ளது. இத்தொழில் சுதந்திர வர்த்தக வலயங்களிலும் அதற்கு வெளியிலும் வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. மொத்தம் சுமார் 3½ லட்சம் தொழிலாளர் ஊழியர்கள் தைத்த ஆடைகள் உற்பத்தித்துறையில் வேலை செய்கின்றனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் சுதந்திரவர்த்தக வலயத்தில் தொழில் புரிகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் இளம் பெண்களாகவே உள்ளனர். 2010ன் நடுப்பகுதியில் 200 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதனால் 20000 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். தைத்த ஆடைகள் உற்பத்தியில் 59 வீதம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. முதலிடத்தில் இருந்து வந்த தேயிலை ஏற்றுமதி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை தேயிலைத் தோட்டக் கம்பனிகள் நட்டத்தில், இயங்குவதாகக் கணக்குக் காட்டி வருகின்றன. தோட்டத் தொழில்துறையில் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் அரைவாசிப் பேர் பெண்களாவர். அவர்கள் கடுமையான நிலையில் தொடர்ந்தும் வேலை செய்து வருகின்றனர். போசாக்கின்மை, தாய் -சேய் நலமின்மை, இறப்பு என்பன மோசமானதாக இருந்து வருகிறது. இச்சூழலில் மலையகத் தேயிலை, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய சம்பளம் குறைவானதாகவே இருந்து வருகிறது. இதில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே ஆகக் குறைந்த நாட் சம்பளம் பெறுவோராக உள்ளனர். அதேவேளை மத்தியகிழக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள நம்நாட்டுத் தொழிலாளர்கள் கடுமையான சூழல்கள் மத்தியில் குறைந்த சம்பளத்தில் (ஒப்பிட்டு வகையில் நம்நாட்டு சம்பளத்தை விட சற்று அதிகம்) வேலை செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்ட மூன்று துறைகளிலும் ஆண்களை விடப் பெண்களே அதிகளவான எண்ணிக்கையில் உழைப்போராகக் காணப்படுகின்றனர். அதேபோன்று விவசாயத்துறையிலும் அரசாங்க தனியார் துறைகளிலும் பெண்கள் கணிசமான அளவுகளில் தொழில்புரிந்து வருகின்றனர். அவ்வாறிருந்தும் பெண்கள் வர்க்க ரீதியிலும் பால் நிலை அடிப்படையிலும் மட்டுமன்றி இன சாதிய நிலைகளிலும் பல்வேறு பிரச்சினைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர் கொண்டவாறே காணப்படுகின்றனர்.
நாட்டின் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளும் மீனவர்களும் நமது நாட்டின் உணவுத் தேவையின் உற்பத்தி சக்திகளாக இருந்தபோதிலும் அவர்கள் புறக்கணிக்கப்படும் நிலையிலே இருந்து வருகின்றனர். ஒரு தேசிய பொருளாதாரத்திற்கான அடிப்படைகளும் திட்டமிடலும் கைவிடப்பட்ட காரணத்தால் விவசாயம், மீன்பிடி, சிறுதொழில்கள் ஆகிய துறைகள் நலிவடைந்து செல்வதையே காணமுடிகிறது. ஏனைய துறைகளைப் பொறுத்தவரையிலும் ஒரு தேசிய பொருளாதாரத்திற்கான இலக்கை நோக்கி நாடும் மக்களும் வழிநடாத்தப்படவில்லை என்பது தெளிவானதாகும்.
நாட்டின் சனத்தொகை இரண்டே கால் கோடி எனச் சனத்தொகைப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர். அரசாங்கத் துறையில் சுமார் பதின்மூன்று லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தனியார் துறையில் (5 லட்சம் பெருந் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கி) அறுபத்தைந்து லட்சம் பேர் தொழில் செய்கின்றனர். நாட்டில் இருபத்தைந்து லட்சம் விவசாயிகள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மொத்த தேசிய உற்பத்தியில் 12-13 வீதத்தினை மட்டுமே விவசாய உற்பத்தி கொண்டுள்ளது. அதேபோன்று நாட்டின் சனத்தொகையில் இருபத்தைந்து சதவீதத்தினர் இளைஞர் யுவதிகளாகக் காணப்படுகின்றனர். இவ் இளைஞர்களில் வேலை இன்மையை எதிர்நோக்குவோர் கணிசமானவர்களாக உள்ளனர். வருடாவருடம் பல்கலைக்கழங்களில் இருந்தும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலிருந்தும் வெளிவரும் படித்த இளம் தலைமுறையினருக்கு உரிய வேலை வாய்ப்பு இன்றியே இருந்து வருகின்றனர். அதேவேளை நவீன தொழில்நுட்பத்துறை தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் பணிபுரிவோர் வெள்ளை உடைதரித்த சுரண்டப்படும் ஊழியர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களை அறியாமலே அவர்கள் நவீன வழிகளில் சுரண்டப்பட்டு வருவதானது அதிகரித்தச் செல்கிறது. ஆனால் அத்தகையோர் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. இவை யாவும் ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டவையேயாகும்.
மேலும் இன்றைய உலகமயமாதலின் கீழான பொருளாதார அமைப்பானது மக்கள் பலவழிகளிலும் சுரண்டப்படுவதையும் அதேவேளை மக்கள் மத்தியில் குறுக்குவழிகள் ஏமாற்றுக்களை ஊக்குவிக்கும் வகையிலேயே வழிகாட்டி நிற்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை போன்ற தோற்றத்தைக் காட்டிக் கானல் நீரை நம்பிச் செல்லுமாறு மக்களைத் தூண்டி வருகின்றது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏனைய வர்த்தக மையங்கள், என்பன மக்கள் மத்தியில் ஆசை வார்த்தைகள் கூறிக் கடன்கள் வழங்கி அவற்றை வட்டியோடு அறவிட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் கடன் பளுவிற்குள் சிக்கித் தவித்து வருவதைக் காணமுடிகிறது. இவ்வாறு நோக்கும் போது தொண்ணூறு வீதமான மக்கள் இன்றைய அமைப்பாலும் அதனைக் கட்டிக்காத்து வரும் ஆட்சி அதிகார வர்க்கத்தினராலும் சுரண்டி அடக்கப்படும் நிலை தெளிவானது. சகல நிலைகளின் ஊடாகவும் உழைக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வருவதையே காண முடிகிறது.
நாட்டுக்கு வெளியே மத்திய கிழக்கு நாடுகளில் பல லட்சம் ஆண்களும் பெரும் அளவுக்குப் பெண்களும் தொழில்புரிந்து வருகின்றனர். அவர்கள் அனுப்பும் பணம் அரசாங்கத்திற்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஆனால் அவர்கள் கடும் வெயிலிலும் குளிரிலும் கடும் உழைப்பைக் கொடுத்தே வருகின்றனர். அதைவிடப் புலம்பெயர்ந்து ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளில் வாழ்வோரில் தமிழர்களே அதிகம். அவர்களது பண அனுப்பலும் அதன் மூலமான பண்பாட்டுச் சீரழிவுகளும் விரிவாக நோக்க வேண்டியவைகளாகும். அதே வேளை புலம் பெயர்ந்தவர்களில் குறிப்பிட்ட தொகையினர் மனித நேய உதவிகளுக்காகப் பணம் அனுப்புவதும் காணவேண்டிய வையாகும்.
அதேவேளை நாட்டின் சமூக பண்பாட்டுத்துறைகள் மிக வேகமான சீரழிவுகளுக்குள் அமுங்கி வருவதைக் காணமுடிகின்றது. கல்வியும் சுகாதாரமும் என்றுமில்லாத அளவிற்கு கீழிறங்கி வருகிறது. சமூக நலன் மக்கள் நலன் என்பன அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்பட்டு மூன்று தசாப்தங்களாகிவிட்டன. தனியார்மயம் எப்போது வரவேற்கப்பட்டதோ அன்றிலிருந்து கல்வியும் சுகாதாரமும் சீரழிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டன. அந்நிலை இன்று அதி உச்சநிலையில் காணப்படுகிறது. அரச பல்கலைக்கழகங்களுக்கு நிகராகத் தனியார் பல்கலைக்கழங்களை கொண்டு வந்து சேர்த்துவிட அரசாங்கம் துடியாய்த் துடித்து நிற்கிறது. நாட்டின் இலவசக் கல்வியானது இன்று குற்றுயிராக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் கல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் ஆறு வீதம் ஒதுக்கப்பட வேண்டும் எனக்கோரி நூறு நாட்கள் போராடி நின்றனர். ஆனால் அரசாங்கம் அதனைப் பலவழிகளிலும் முறியடித்துக் கொண்டது. கல்விக்கு 2011இல்.06 வீதத்தையும் 2012ல் 1.85 வீதத்தையும் மட்டுமே மொத்த தேசிய வருமானத்திலிருந்து கல்விக்கு அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. அதனால் கல்வித்துறை நெருக்கடி அதிகரித்தே செல்கிறது.
இவ்வாறே சுகாதாரத்துறையின் அரசாங்கப் பொது மருத்துவமனைகள் உரிய கவனிப்பின்றி படிப்படியாகச் சீரழியவிடப்பட்டுள்ளது. 2012ல் சுகாதாரத்துறைக்கு மொத்த தேசிய வருமானத்திலிருந்து 1.31 வீதமே ஒதுக்கப்பட்டது. இதுவும் 2013ல் 1.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு நாட்டின் கல்வி சுகாதாரத்துறைகளைக் கவனிக்காத எந்தவொரு ஆட்சியும் மக்கள் விரோத ஆட்சியேயாகும். அதேவேளை தனியார் மருத்துவமனைகளும் வைத்தியர்களும் நோயாளர்களிடம் இருந்து பணத்தைச் சுளைசுளையாகக் கறந்து கொள்கின்றனர். பணம் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு நோயில் இருந்து தப்ப முடியும்; அல்லாதுவிடின் இறந்து போக வேண்டியதுதான் என்ற நிலையே நீடித்து வருகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் இலங்கையில் டெங்கு நோய் ஒழிப்பு பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். சுகாதாரத்துறையின் தனியார்மயத்தால் உழைக்கும் மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சூழல் மாசடைதலால் நாட்டில் நோய்கள் பெருகி வருகின்றன. புற்றுநோய், இருதயநோய், சிறுநீரக நோய், காசநோய் போன்றன மக்களைப் பற்றிப் பீடித்து வருகின்றன. ஏகாதிபத்திய லாப வெறி மிக்க உற்பத்தி முறைமையும் விநியோக நுகர்வுமே சூழல் மாசடைதலின் அடிப்படையாகின்றன. இதனால் இயற்கை நிலைகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றில் மக்களை விழிப்படைய வைத்தல் அவசியமானதாகும்.
இவ்வாறே இலங்கையின் பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களின் ஊடாகவே பண்பாடு இருந்து வருவதாகப் பெருமை பேசப்படுகின்றது. ஆனால் நாடு இன்று பண்பாட்டின் பேரால் மிக மோசமான சீரழிவுகளை சந்தித்து வருகிறது. உலகமயமாதலின் கீழான நச்சுக் கலாசார ஊடுருவல் சகலரிடத்திலும் இலகுவாகவே குடிகொண்டு நிற்கிறது. பெருமையாகக் கூறப்படும் மதப்பண்பாடுகள் எனப்படுபவை அத்தகைய நச்சுக் கலாசாரங்களோடு இயைபுடையதாகிச் சகல கழிவுகளையும் உள்வாங்கி வருகிறது. இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளுக்குள் உழைக்கும் மக்களும் குறிப்பாக இளைஞர் யுவதிகளும் சிக்குண்டு வரும் போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. சினிமா, சின்னத்திரைகள், இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள் மூலமான நச்சுத்தனங்கள், தாராளமயமாகப் பரப்பப்படுகின்றன. மேலும் போதைப் பொருள் பாவனை – விற்பனை வளர்ந்து செல்கின்றன. பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிகள் சித்திரவதைகள் பெருகிவருகின்றன. சட்டங்கள் இருந்தபோதிலும் மதுப்பாவனையும் புகைத்தலும் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றால் இளந் தலைமுறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்து அவற்றுக்கு எதிராக புதிய பண்பாட்டிற்கான முன் முயற்சிகளை முன்னெடுப்பது என்பது கடுமையான சவால்களை எதிர்நோக்கியதாகவே உள்ளது.
சர்வதேச நிலைமைகள்
தோழர்களே!
இன்றைய சர்வதேச நிலைமைகள் எமது 5வது அனைத்திலங்கை மாநாடு முன்வைத்த கணிப்பீடுகளின் அடிப்படையிலேயே சென்று கொண்டிருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடாத்தி வருகின்றன. நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட்டு தமது ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் நலன்களைப் பேணிக் கொள்ளவே நாசகார யுத்தங்களை நடாத்துகின்றனர். மனித குலத்திற்குப் பேரழிவுகளைக் கொண்டுவரத் தொடர்ந்தும் பயங்கர ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதுடன் அவற்றை விற்றுப் பெருலாபம் பெறுவதற்காக நாடுகளிலும் நாடுகளுக்கு இடையேயும் யுத்தங்களை மூட்டி விடுகின்றனர். அத்துடன் உள்நாட்டுப் பிரச்சினைகளை மோதல்களாக மாற்றி உள்நாட்டு, யுத்தங்களை திரை மறைவில் இருந்து ஊக்குவிக்கின்றனர். இலங்கையில் இடம்பெற்று வந்த தேசிய இனப்பிரச்சினை காரணமான யுத்தம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். ஈராக்கில் பொய்க் காரணம் காட்டி ஆக்கிரமிப்பு நடாத்திய அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் அந்நாட்டை சின்னாபின்னப்படுத்தி எண்ணை வளத்தை மேன்மேலும் உறுஞ்சித் தமதமாக்கிக் கொண்டனர். அது மட்டுமன்றி இன்று அந்த நாட்டில் முஸ்லீம் பிரிவுகள் மத்தியில் மோதலும் அழிவுகளும் இடம்பெறுவதற்கு வழிவகுத்து நிற்கின்றனர். அதே போன்றே இன்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பும் அதற்கு எதிரான தலிபான்களின் போராட்டமும் இடம்பெற்று வருகின்றன. அழிவுகள் அந்நாட்டிற்கும் மக்களுமேயாகும். அதேவேளை அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அடிக்குமேல் அடிவாங்கிக் கொள்கிறது.
அடுத்து ஈரான் மீது குறிவைத்து அமெரிக்கா செய்து வரும் நடவடிக்கைகள் மிக மோசமானவைகளாகும். மத்திய கிழக்கில் எண்ணெய் வளத்திற்கும் தமது ஆதிக்கத்திற்கும் தடையாக இருந்த ஒவ்வொன்றையும் தகர்த்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதே ஏகாதிபத்திய நோக்காகும். அத்துடன் தனது நச்சுத்தனக் கூட்டாளியாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலைப் பாதுகாப்பதும் அதன் ஆழமான நோக்காகும். அதன் வழியிலேயே லிபியாவை உள்நாட்டு யுத்தக் கிளர்ச்சிக்கு உட்படுத்தி கேணல் கடாபியின் ஆட்சியை வீழ்த்தி அவரையும் அழித்தக் கொண்டது. அதன் போக்கில் இப்போது சிரியாவில் தலையிட்டு அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்துக் கொள்ளப் படாத பாடுபடுகிறது. மேலும் ஆசியாவில் வடகொரியா மீது தலையீடு செய்து அணு ஆயுத உற்பத்தி என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி வருகிறது. மத்திய கிழக்கில் எழுந்த மக்கள் எழுச்சிகளைத் திசைதிருப்பி தமது நலன்களுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயலாற்றி வருகிறது அமெரிக்கா. எகிப்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் பலாபலன்கள் மக்களைச் சென்றடைய விடாது தடுத்து வருகிறது. அங்கு ஜனநாயகம் மீள அரங்கிற்கு வருவதைத் தடுத்து தனது நம்பிக்கைக்குரிய சக்திகளை தொடர்ந்து வைத்திருக்கவே அமெரிக்கா அந்நாட்டு ராணுவத்தோடு சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதேவேளை தனது உலகளாவிய பொருளாதார ராணுவ அரசியல் ஏக ஆதிக்கத்திற்கு சவாலாக வளர்ந்து வரும் ஒவ்வொரு நாட்டின் மீதும் அமெரிக்கா கண்காணிப்புடன் இருந்து தமது காய்களை நகர்த்தி வருகிறது. இதில் முன்னாள் சோஷலிச நாடான ரஷpயா, அண்மைக்காலமாக சோஷலிசத்திலிருந்து விலகிச் சென்ற சீனா ஆகியன அமெரிக்காவின் உறுத்தலுக்கு உள்ளாகி நிற்கின்றன. இந்தியாவின் ஆளும் வர்க்கத்தைத் தமது மூலோபாயப் பங்காளியாக்கிக் கொண்ட அமெரிக்கா சீனாவைச் சுற்றி வளைப்பதில் பொருளாதார ராணுவத் தந்திரோபாயத்தை வகுத்து நிற்கிறது. ஆசிய பசுபிக் பாதுகாப்புத் திட்டம் என்பது அத்தகையதேயாகும். சீனா இன்று சோஷலிசத் தடத்தில் பயணிக்கும் நாடு அல்ல. அது முற்றிலும் தனது தேச நிர்மாணத்திற்கும் தனது பொருளாதார வளர்ச்சிக்கும் உரியபாதையில் செல்லும் நாடாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் அதன் பொருளாதாரம் அபரீத வளர்ச்சி கண்டுள்ளது. அந்நிய முதலீடுகள் உள்ளீர்க்கப்பட்டு அதன் ஊடாக உற்பத்திகளும் உலக அளவிலான வர்த்தகமும் விரிவு பெற்றுள்ளன. ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதன் வர்த்தகமும் முதலீடுகளும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு சீனப் பொருளாதாரம் நிலையானதாகவும் வளர்முகமாகவும் உள்ள அதேவேளை அமெரிக்க மேற்குலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சிகளைக் கண்டு கீழ்நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகப் போட்டியினை உருவாக்கி வருவதுடன் முதலாளித்துவப் போட்டியாகவும் முன்சென்று கொண்டிருக்கிறது. இதனைச் சோஷலிசப் பொருளாதார வளர்ச்சி என்று கூறமுடியாது. முதலாளித்துவ பாதையில் பயணிக்கும் இன்றைய சீனாவினால் உலக மக்களின் ஏhதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கோ விடுதலை இயக்கங்களுக்கோ எவ்வித உதவியும் ஆதரவும் செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது.
ஆனால் உலகின் பல நாடுகளும் நாடுகளில் உள்ள மக்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறது. இதில் லத்தீன் அமெரிக்க நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. சின்னஞ் சிறிய நாடான கியூபாவின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்மாதிரியில் வெனிசலேவா, ஈக்குவடர், பொலிவியா, நிக்கரகுவா, பிரேசில், ஆஜன்ரீனா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு வலுவடைந்து அமெரிக்காவிற்கு அச்சமூட்டும் சவாலாகி நிற்கின்றன. அங்குள்ள மக்களின் அரசியல் விழிப்புணர்வும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளும் பலநிலை அளவுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அம்பலமாக்கி எதிர்த்து வருவதற்கு அடிப்படையாக இருந்து வருகின்றன.
இன்று உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செய்வதிலும் அதனைப் பாதுகாக்கும் பாரிய ராணுவத்தைக் கொண்டிருப்பதிலும் அவற்றுக்கான ஆயுத உற்பத்தியிலும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு வருவதிலும் அமெரிக்காவே முன்நிலை வகிக்கின்றது. அதன் கூட்டாளிகளாக ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, யப்பான் போன்ற நாடுகளும் இருந்து வருகின்றன. இத்தகைய கூட்டில் பெரும் ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்ளும் இந்தியா மறைவாகவும் வெளியாகவும் தன்னை இணைத்து நிற்கின்றது. இந்நிலைப்பாட்டின் ஊடாக இந்தியா தென்னாசியப் பிராந்தியத்தில் தன்னை ஒரு மேலாதிக்க வல்லரசாக வலுப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்திய பிராந்திய மேலாதிக்கமானது தென்னாசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ;, இலங்கை, மாலைதீவு, நேபாளம் போன்ற நாடுகளுடனும் மக்களுடனும் முரண்பாடுகளை வளர்த்து நிற்கின்து. சீனாவுடன் முரண்பட்டு நிற்கிறது. இப்போது ஆப்கானிஸ்தான், மியன்மார், வியட்நாம், இந்து சமுத்திரப் பிராந்தியம் ஆகியவற்றில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த முற்பட்டுள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியமும் மேற்குலக நாடுகளும் தமது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டுவரவே முயன்று வருகின்றன. அதேவேளை இந்தியா தனது கைகளுக்கும் கால்களுக்கும் கீழே இலங்கை இருப்பதையே விரும்புகின்றது. இவ்விடயத்தில் அமெரிக்க – இந்தியப் போட்டி இருப்பினும் அமெரிக்கா இந்தியாவைப் பகைத்துக் கொள்ள வெளிப்படையாக விரும்பவில்லை. ஏனெனில் தமது மூலோபாயப் பங்காளியான இந்தியா தனக்கு விரோதமாகப் போகமாட்டாது என்பதில் அமெரிக்காவிற்கு நம்பிக்கை உண்டு. அதனாலேயே சீன இந்திய முரண்பாட்டை எப்போதும் கொதி நிலையில் வைத்திருக்க அமெரிக்கா காய்களை நகர்த்தியவாறு இருந்து வருகிறது. இத்தகைய சூழலைப் பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் சீன உறவை மிக நெருக்கமாக்கி தமது ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்து வருகிறார். சீனாவும் தனது வர்த்தகம், முதலீடு, கடன் வழங்கல் போன்றவற்றை அதிகளவுக்கு வழங்கி இலங்கையைத் தமது பக்கத்தில் வைத்திருப்பதைத் தந்திரோபாயமாக வைத்து வருகிறது.
இவ்வாறான சர்வதேசச் சூழலில் உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் மாக்சிச லெனினிச இயக்கங்களும் மாக்சிச சோஷலிச நம்பிக்கைகளுடன் தம்மை முன்நோக்கி நகர்த்தி வருகின்றன. எனவே நாமும் அந்த நம்பிக்கையின் ஒரு பகுதியாகி நமது நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பiயும், மாக்சிச லெனினிச இயக்கத்தையும் முன்னிலும் பார்க்க வேகத்துடன் முன்னெடுத்து எமது சர்வதேசக் கடமையினை முன்னெடுக்க வேண்டும். அதனை உறுதியாக முன்னெடுப்போம்.
தோழர்களே!
மேலே கூறப்பட்ட விடயங்கள் இன்றைய இலங்கைச் சூழலில் காணப்படும் அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டுத் தளங்களில் காணப்படும் யதார்த்த நிலைமைகளையும் சர்வதேசப் போக்குகளையும் எமது மாக்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை நிலைப்பாட்டின் ஊடான ஒரு சுருக்கமான கண்ணோட்டமாகும். இவற்றின் விரிவான விளக்கங்களை ஏற்கனவே ஐந்தாவது அனைத்திலங்கை மாநாட்டின் (2010) அறிக்கையிலும் பின்பு வேலைத்திட்டத்திலும் (2011) காண முடியும்.
• வாழ்க மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை!
• வளர்க புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி
சி.கா.செந்திவேல் வெ.மகேந்திரன்
பொதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்
வு.P: 0779774427 வு.P: 0716745642