Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தெளிவான கோரிக்கைகளாக முன்வைத்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்ட பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே இன்றைய சூழலில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ள சரியான தெரிவாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகளுக்கும் முடிவுகளுக்கும் வருவதற்கு இன்னும் காலம் கடந்து விட வில்லை என்பதை எமது புதிய ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கிறது.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் அவசியத்தை எடுத்துக் காட்டி புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்க் கட்சிகள் அண்மையில் சூரிச் நகரில் ஒன்று கூடி இரண்டு நாள் மாநாடு நடாத்தினர். அத்தகையவர்களால் அவ் ஐக்கியத்தின் அடிப்படையில் ஏன் ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முடியவில்லை. அவ்வாறு ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தினால் பிரதான வேட்பாளர்களுக்கு ஐம்பது சதவீத வாக்குகள் பெறமுடியாத நிலை ஏற்படுவதுடன் அரசியல் யாப்பு நெருக்கடியையும் இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எதிர்நோக்க வேண்டிய இக் கட்டான நிலையும் தோன்ற முடியும். அத்துடன் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகளையும் வற்புறுத்த சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கும்.

எனவே தமிழ் முஸ்லீம் மலையக கட்சிகளதும் இடதுசாரிக் கட்சிகளதும் சார்பில் தனியொரு பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு பேச்சுவார்த்தை நடாத்தி முடிவுக்கு வரவேண்டும். இதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இதனை விடுத்து மக்களின் பொது எதிரிகளான இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதோ அன்றித் தனித்தனியே தங்களைத் தாங்களே வேட்பாளர்களாக்கிக் கொள்வதோ அரசியல் வறுமைக்கும் சுயநல அரசியலுக்கும் உட்பட்டதேயாகும். எனவே பொது வேட்பாளர் பற்றிய முடிவுக்கு வருமாறே புதிய ஜனநாயக கட்சி தமிழ் முஸ்லீம் மலையக கட்சிகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் வேண்டிக் கொள்கிறது.

 – சி.கா.செந்திவேல் –
 பொதுச் செயலாளர்

8.12..2009

Exit mobile version