விடுதலைக்காக போராடும் ஒரு அமைப்பு பேரினவாத சக்திகளால் வழிநடத்தப்படும் இராணுவத்தினரிடம் எப்படி சரணடைய முடியும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெமட்டகொடை சாஸ்புரவில் இடம்பெற்ற இடதுசாரி முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
இன்று இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை கண்டு, இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் விரலைக்கூட நீட்டாது உள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மௌன அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
நடைபெறும் கொடிய யுத்தத்தினால் நாடே பிணக்காடாக மாறியுள்ளது. பேரழிவுக்கு பின்னே வரும் அமைதியில் உல்லாசமாக ஆட்சி நடத்தலாம் என ஐக்கிய தேசியக் கட்சி கனவு காண்கிறது.
இந்திய பிராமணியம் தற்போது உலகமய முதலாளித்துவ சித்தாந்தத்தை அதிகமாகவும், இந்திய பிராமணியத்தை சொற்பமாகவும் கொண்ட ஒரு தத்துவத்தின் கீழ் செயற்படுகிறது. எனவே, அதில் ஏகாதிபத்திய நலன்களே அதிகம் காணப்படுகின்றது.
இன்று உலக முதலாளித்துவம் மிகப் பெரிய பொருளாதார சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதில் இருந்து மீள்வதற்கு அதிக இழப்புக்களை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பாகும்.
1929 இல் முதலாளித்துவம் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்தது. இதன் பின்பே கிட்லரின் நாஜிசம் தோற்றம் பெற்றது. சிக்மன் புறையிட் இது பற்றி தெளிவாக கூறியுள்ளார். மனித வரலாற்றில் பெரும் பின்னடைவுகள் ஏற்படும் போது மக்கள் அதிக தியாகத்தை புரிய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதே நேரம் மனித இனம் அதிக இரத்தத்தை சிந்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.
புதிய இந்திய பிராமணிய தத்துவம் அதிக மனித இரத்த வெள்ளத்தை எதிர்பார்க்கிறது போலும். இன்று இந்திய ஆட்சியாளர்களிடம் மனிதத்துவம் என்பதே இல்லாது போயுள்ளது.
இன்று இந்தியாவில் திராவிட மக்களின் எழுச்சியானது, புதிய இந்திய பிராமணிய தத்துவத்திற்கு எதிரான பிரதான எழுச்சியாகும்.
இன்று உலகம் முழுவதும் தோன்றியுள்ள தமிழ் மக்களின் எழுச்சியானது நிச்சயம் அவர்களுக்கு வெற்றியை வழங்கும்.
இந்திய ஆட்சியாளர்கள், உலக ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து மகிந்த அரசுக்கு வழங்கிய ஆதரவு இன்று வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இன்று விடுதலைப்புலிகளை நாம் எந்தவிதத்திலும் குற்றம் கூற முடியாது. அவர்கள் தமிழ் மக்களின் உண்மையான உரிமை கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருப்பார்கள். விடுதலைக்காக போராடும் ஒரு அமைப்பு பேரினவாத சக்திகளினால் வழி நடத்தப்படும் இராணுவத்திடம் எப்படி சரண் அடைய முடியும்?
இன்று வன்னிப் பகுதியில் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்பு இலங்கை இராணுவத்தின் செல் தாக்குதல் காரணமாகவே ஏற்படுகிறது. இம் மக்களது அவல நிலை பற்றி அமெரிக்கா, இந்தியா தெரிவிக்கும் வருத்தம் போலியானதாகும்.