தமிழ் ஸ்டுடியோவிற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக நான் எனது சொந்த பணத்தையே செலவு செய்து வருகிறேன். தேவைப்படும்போது, அவ்வப்போது நிதியுதவி கேட்டு முகநூளில் எழுதி வருகிறேன். கிடைக்கும் எல்லா நிதியுதவிகளையும் நன்றி சொல்லி, அதற்கான அறிவிப்பையும் வெளியிடுகிறேன். இதில் இதுவரை எந்த ஒளிவு மறைவும் இல்லை. இதிலும் கூட தொடர்ச்சியாட எந்த தனி மனிதர்களிடமும் நான் நிதியுதவி பெறுவதில்லை. ஒருமுறை நிதியுதவி செய்தவர்கள், அடுத்த முறை நிதியுதவி செய்ய முன்வந்தால் கூட வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். நான் அப்படி மறுத்த நண்பர்களும் இதனை படிப்பார்கள். மேலும், மிக குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு, எனக்கு உதவ முன்வரும் நண்பர்களிடமும் நான் நன்கொடை பெறுவதில்லை. நல்ல ஊதியம் பெறும்போது உதவுங்கள் என்று சொல்லி மறுத்து வருகிறேன். நன்கொடை பெறுவதில் கூட எனக்கு நிறைய அறம் இருக்கிறது. இதுவரை தமிழ் ஸ்டுடியோவிற்காக எந்த அரசியல் சார்பு உடைய அமைப்பிடமோ, அரசியல்வாதிகளிடமோ, தனித்த அமைப்பிடமோ நான் நிதியுதவி பெற்றதில்லை. நிறைய நண்பர்கள், பல்வேறு நிறுவனங்களிடம் பேசி, வருடா வருடம் நிதியுதவி பெற்று தருகிறோம் என்று சொல்லியும், இதுவரை நான் யாரிடமும் அப்படியான நிதியுதவியை பெற்றதில்லை. வேண்டாம் என்று மறுத்துவிடுகிறேன். காரணம், நான் யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் செய்துக்கொள்ளாதவன்.
என்னை நம்பி பல்வேறு நண்பர்கள், மாணவர்கள் என்னோடு பயணிக்கிறார்கள். வணிகத்தை மட்டுமே முதன்மையாக கொள்ளாமல், கலை சார்ந்தும், திரைப்படத்திற்கு அதன் மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், மக்களுக்காக கலையை பயன்படுத்த வேண்டும் என்றும் என்னுடைய மாணவர்களுக்கும், என்னை பின்தொடர்பவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து வருகிறேன். எனவே நான் என்னளவில் மிக உறுதியாக அறத்தை பேணி வருகிறேன். பின் தொடர்பவர்கள், மாணவர்கள் என்னை தொடர்ந்து அவதானித்து வருபவர்கள். அவர்களிடம் நான் என்ன சொல்கிறேனோ, அதன்படி வாழவேண்டும், அப்போதுதான் அவர்களுக்கும் இந்த திரைப்படக் கலை மீது உண்மையாக மதிப்பு ஏற்படும். எனவே நான் ஒருபோதும் பொருளாதாரம் சார்ந்து, அல்லது நிதியுதவிக்காக என்னுடைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு பொருளாதாரமோ, பணமோ, புகழோ ஒரு பொருட்டே அல்ல. நான் மக்களின் கலை ரசனையை மேம்படுத்தவும், கலையை மக்களுக்காகவும் பயன்படுத்தவும், மக்களின் அரசியலை கலை பேச வேண்டும் என்றும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னையில் தமிழ் ஸ்டுடியோ நடத்திய, With you Without you திரைப்பட திரையிடலுக்காக, நானே என்னுடைய சொந்தப்பணத்தை செலவழித்திருக்கிறேன். தவிர நன்கொடை வேண்டும் என்று கேட்டு, முகநூளில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அதனை பார்த்துவிட்டு, வெளிநாட்டில் இருக்கும் நண்பர் நியூட்டன் அந்த 15000 ரூபாயை நானே கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னார். நானும் அவசரத்தில் மேலதிக தகவல் எதையும் கேட்காமல், சரி என்று சொல்லிவிட்டேன். பிறகுதான் அவர்கள் தனிப்பட்ட அரசியல் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். பின்னர் அவர்களின் இணையத்திலும், தங்களின் ஆதரவோடு சென்னையில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது என்கிற கட்டுரை எழுதப்பட்டிருப்பதையும் பார்த்தேன். உடனே சில நண்பர்கள், ஏதோ இதில் வெளிநாட்டு சதி இருப்பதுபோல் பேச தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கொடுப்பதாக சொன்ன நிதியுதவி ரூபாய் 15000 இன்னமும் எனக்கு வந்து சேரவில்லை. வந்துசேர்ந்ததும், அந்த பணத்தை அவர்களிடமே திருப்பிக்கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
இனி நன்கொடை கேட்கும்போதே, தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும், அரசியல் அமைப்புகள், நிறுவனங்கள் யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று குறிப்பு எழுதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மக்கள் பணியாற்றுகிறேன். அதற்கு மக்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். என்னால் இயன்ற அளவிற்கு நானும் எனது சொந்த பணத்தை செலவழிக்கிறேன். இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்ட என்னுடைய சொந்த பணத்தை தமிழ் ஸ்டுடியோவிற்காக செலவழித்து இருக்கிறேன். தமிழ் ஸ்டுடியோவிற்காக 7 லட்சம் வரை நண்பர்களிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அதையும் நான்தான் திருப்பி செலுத்த வேண்டும். நான் ஒருபோதும் பணத்திற்காக, பொருளாதார தேடலுக்காக வாழ்பவன் அல்ல. என்னுடைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் இதனை நன்கறிவார்கள். எனவே இந்த பிரச்சனையை நண்பர்கள் இத்தோடு முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் ஸ்டுடியோவிற்கும், வேறெந்த அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை. தமிழ் ஸ்டுடியோ என்னுடைய தலைமையில் இயங்கும், வணிக நோக்கமில்லாத, தனிப்பட்ட திரைப்பட இயக்கம். மற்றபடி தமிழ் ஸ்டுடியோ எப்போதும், மக்களுக்காக, அவர்களின் திரைப்பட ரசனைக்காக, திரைப்படங்களை மக்கள் பிரச்சனையை பற்றி பேசவைப்பதற்காக தொடர்ந்து செயல்படும். நன்றி.
தமிழ் ஸ்டுடியோ அருண்